/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திரும்பும் இடமெல்லாம் பிளக்ஸ் மயம்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
திரும்பும் இடமெல்லாம் பிளக்ஸ் மயம்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
திரும்பும் இடமெல்லாம் பிளக்ஸ் மயம்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
திரும்பும் இடமெல்லாம் பிளக்ஸ் மயம்; திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : செப் 19, 2024 09:59 PM

உடுமலை : உடுமலை நகரில், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
உடுமலை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு உட்பட பகுதிகளில், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன.
நெரிசல் மிகுந்த பகுதிகளில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 'பிளக்ஸ்' பேனர்கள் வைக்க தடைவிதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், நகராட்சி நகர் நல குழு, போக்குவரத்து போலீசார், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைந்து இதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. இதனால், நெரிசல் மிகுந்த பகுதிகளில், பேனர்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மாரியம்மன் கோவில் அருகில் திருப்பூர் ரோடு பிரிகிறது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த இடத்தில் பிரியும் போது, நெரிசல் அதிகளவு இருக்கும்.
மேலும், திருப்பூர், செஞ்சேரிமலை போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இணைவதால், நெரிசல் காரணமாக விபத்துகளும் ஏற்படும்.
இவ்வாறு, நெரிசல் மிகுந்த திருப்பூர் ரோடு சந்திப்பின் இருபுறங்களிலும் மெகா சைஸ் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது வழக்கமாகியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் அருகிலும், பயன்பாட்டுக்கு வராத புது பஸ் ஸ்டாண்ட் முன், தளி ரோடு, காந்திநகர் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கப்படும் பேனர்களாலும் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இது குறித்து பொது மக்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், உடுமலை நகரில், ரோடு சந்திப்பு பகுதிகளில், பேனர்கள் வைக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
பேனர்கள் வைப்பதற்கான இடங்களை வரையறுத்து, உரிய விதிமுறைகளை அறிவிக்கலாம். இல்லாவிட்டால், சிலரின் சுயநலத்துக்காக மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.