/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்வு முடிவு; மாவட்ட நிர்வாகம் ஆயத்தம்
/
பிளஸ் 2 தேர்வு முடிவு; மாவட்ட நிர்வாகம் ஆயத்தம்
ADDED : மே 05, 2025 10:39 PM
உடுமலை; பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட, மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மாணவர்களும் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தன. தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் ஏப்ரலில் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன.
இதில், மார்ச், 3 முதல், 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது; மாவட்டத்தில், 94 மையங்களில், 25 ஆயிரத்து, 348 மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல், 4ம் தேதி துவங்கியது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. மொழித்தாள் தேர்வுகளை தொடர்ந்து, முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டது; இப்பணி, ஏப்., 17ம் தேதி நிறைவு பெற்றது.
மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை பதிவேற்றும் பணி இரு வாரங்கள் சுறுசுறுப்பாக நடந்தது. கடந்த, 25ம் தேதியுடன் மாவட்ட அளவில் பொதுத்தேர்வு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, விபரங்கள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிய, மாணவ, மாணவியர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே, அரசும் அறிவித்துள்ளது.
அவ்வகையில், கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்வு முடிவுகளை அன்று காலை, 10:00 மணிக்கு வெளியிட உள்ளனர்.