/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பி.எம்., சூர்யஹார்' சோலார் மின் திட்டம்
/
'பி.எம்., சூர்யஹார்' சோலார் மின் திட்டம்
ADDED : மார் 05, 2024 01:22 AM
திருப்பூர்;மானிய உதவியுடன் கூடிய சோலார் மின் திட்டம், திருப்பூருக்கு பொருந்தாதா என்று, மின்நுகர்வோர் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்கள், பிரிவு அலுவலகம் வாரியாக, மத்திய அரசின் மேற்கூரை சோலார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. பிரதமரின் சோலார் மின் திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, www.pmsuryaghar.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், 'PM -suryaghar' என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், வீட்டு உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தில், ஒரு கிலோவாட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய்; இரண்டு கிலோவாட்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய்; மூன்று கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறனுக்கு, 78 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். பணிகள் முடிவுற்ற, ஏழு முதல் 30 நாட்களில், நுகர்வோர் வங்கிகணக்கில் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், மத்திய அரசு மானியத்துடன் கூடிய சோலார் மின் திட்டம் குறித்து, மின்வாரிய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினும், குறு, சிறு தொழில்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டத்தில், குறிப்பாக, திருப்பூர் பகிர்மான வட்டத்தில் இருந்து இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சோலார் மின்திட்டம், திருப்பூருக்கு பொருந்தாதா என்று மின்நுகர்வோர் கலக்கமடைந்துள்ளனர். திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அதிகாரிகள், இதுதொடர்பான அறிவிப்பை விரைவாக வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதியிடம் கேட்டபோது, ''சோலார் மின்திட்டம் திருப்பூருக்கும் உண்டு; மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும்,'' என்றார்.

