/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை: போலீசார் மீது குற்றச்சாட்டு
/
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை: போலீசார் மீது குற்றச்சாட்டு
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை: போலீசார் மீது குற்றச்சாட்டு
விஷம் குடித்து வியாபாரி தற்கொலை: போலீசார் மீது குற்றச்சாட்டு
ADDED : மார் 15, 2024 01:10 AM

பல்லடம்:பல்லடம் அருகே, வியாபாரி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில், போலீசார் மீது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே புளியம்பட்டி - சடையன்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் வெள்ளியங்கிரி, 30. கால்நடை வியாபாரி. கடந்த, 10ம் தேதி, இவரும், நண்பர்கள் பிரகாஷ் உட்பட இருவர் மது அருந்தியபோது, பிரகாஷ் வைத்திருந்த, 40 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது.
இது குறித்து, பிரகாஷ் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், வெள்ளியங்கிரி தான் எடுத்தார் என்ற சந்தேகம் ஏற்பட்டதாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், அடுத்த நாள் (11ம் தேதி) வெள்ளியங்கிரி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாரிடம் கேட்டதற்கு, 'பணம் காணாமல் போனதாக, பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகிறோம். 11ம் தேதி வெள்ளியங்கிரி ஸ்டேஷனுக்கு மது போதையில் வந்தார்.
வீட்டுக்குச் செல்லுமாறு அனுப்பி வைத்தோம். இதற்கிடையே, பணம் கேட்டு பிரகாஷ் வற்புறுத்தியதால், தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.
வெள்ளியங்கிரியின் உறவினர்கள் கூறியதாவது:
பிரகாஷ் வைத்திருந்த பணத்தை யார் எடுத்தனர் என்று தெரியவில்லை. மறுநாள், பிரகாஷ் மற்றும் சிலர் பணம் கேட்டு வெள்ளியங்கிரியை அடித்துள்ளனர். அவர் தான் பணத்தை எடுத்ததாக சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்து, பணத்தை கொடுத்து விடுமாறு கூறி, எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதனால், பயந்த வெள்ளியங்கிரி, தற்கொலை செய்து கொண்டார். தற்போது, வழக்கை திசை திருப்பும் வகையில், ஸ்டேஷனுக்கே அவர் வரவில்லை என்று சொல்கின்றனர். எனவே, இது குறித்து உண்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆளும்கட்சி தலையீடு
வெள்ளியங்கிரி தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் நீடித்து வரும் நிலையில், உள்ளூர் தி.மு.க., பிரமுகர்கள்
சிலர் இவ்விஷயத்தில் தலையிட்டு வழக்கை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இது குறித்து, தனிப்படை அமைத்து கூடுதல் விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவிட வேண்டும்.

