முதியவர் மீது தாக்குதல்
திருப்பூர் நொய்யல் வீதியை சேர்ந்தவர் நசீர் முகமது, 64. இவர் அபுதாகீர் என்பவருடன் இணைந்து துணி கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. பணத்தை பெற்று கொள்ள, காங்கயம் ரோடு சின்னதோட்டத்துக்கு அபுதாகீர் அழைப்பு விடுத்தார். அங்கே சென்ற நசீர் முகமதுவை, அபுதாகீர், நண்பர்கள் சேட்டு, குத்புதீன் ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார், மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தொழிலாளிக்கு கத்தி குத்து
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சிவகுமார், 35. இவர் கல்லம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டு முன்பு டூவீலரை நிறுத்தியிருந்தார். அங்கு போதையில் வந்த ராமசந்திரன், 22 என்பவர், டூவீலரை தட்டினார். இதை பார்த்து சிவக்குமார் கேள்வி கேட்க, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராமசந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிவக்குமாரை குத்தி காயம் ஏற்படுத்தினார். திருப்பூர் வடக்கு போலீசார் ராமந்திரனை கைது செய்தனர்.
சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ரோம்கம், 20. இவர் வீரபாண்டியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு, அதே மாநிலத்தை சேர்ந்த, 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சமீபத்தில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் ரோம்கம் மீது 'போக்சோ' வழக்குபதிந்து, கைது செய்தனர்.
பாம்பு கடித்து தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம், காங்கயம் கரூர் ரோட்டில் உள்ள மில் ஒன்றில் முத்துபாண்டி 40 என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, பாம்பு கடித்தது. நண்பர்கள் உதவியோடு மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
திருப்பூர், காங்கயம், தாராபுரம் ரோடு கோட்டை மேட்டை சேர்ந்தவர் சிவராஜ், 25; கட்டட தெழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு துாங்க சென்றவர், திடீரென துாக்குமாட்டி கொண்டார். அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு; வாலிபர் கைது
குண்டடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீஸ்காரர் ராமமூர்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சந்தேகப்படும் விதமாக மதுபோதையில் டூவீலரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தனர். கோவை மாவட்டம், நெகமத்தில் டூவீலரை திருடி கொண்டு வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, குனியமுத்துாரை சேர்ந்த ரமேஷ், 33 என்பவரை கைது செய்து, நெகமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.