குண்டாஸ் பாய்ந்தது
நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் குமார், 35 என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது வழிப்பறி வழக்கும் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
44 கிலோ குட்கா சிக்கியது
சந்திராபுரம் அருகே நல்லுார் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். சந்தேகப்படும்விதமாக நின்று கொண்டிருந்த மாசிலாமணி, 34 என்பவரிடம் விசாரித்தனர். விற்பனைக்காக வைத்திருந்த, 44 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, முத்தையன் கோவில் பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்தனர். சந்தேகப்படும் வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். பீஹாரை சேர்ந்த சர்ப்ராஜ், 29 என்பவரை கைது செய்து, ஒரு கிலோவை பறிமுதல் செய்தனர்.
மாணவன் மீது 'போக்சோ'
வெள்ளகோவிலை சேர்ந்தவர், 17 வயது கல்லுாரி மாணவன். அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் மாணவன் மீது போக்சோ வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
மஞ்சப்பூரை சேர்ந்தவர் கன்னியப்பன்,70. நண்பருடன் டூவீலரில் பொங்கலுார் அருகே சென்ற போது பின்னால் சென்ற பைக் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
58 மது பாட்டில் பறிமுதல்
செவந்தாம்பாளையம் 'டாஸ்மாக்' பார் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நல்லுார் போலீசார் சோதனை செய்தனர். மதுவிற்றராமு, 52, அன்புராஜா, 27, சங்கையா, 24, கண்ணன், 23 என, நான்கு பேரை கைது செய்து, 58 மதுபாட்டில், 11 ஆயிரம் ரூபாயைபறிமுதல் செய்தனர்.