துாக்கில் சிறுமி தற்கொலை
காங்கயம், கோட்டைமாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிபிரியா, 16. நேற்று காலை அவர் இருந்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் ஹரிப்பிரியா கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் வீட்டினுள், சேலையால் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் வாலிபர் பலி
ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கவுரி, 41. மகன் மோகன சுந்தரம், 22. இருவரும், சரக்கு ஆட்டோவில் பூக்களை ஏற்றிக் கொண்டு, பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை மொடக்குறிச்சியைச் சேர்ந்த சுகேஷ், 20 ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை விஜயமங்கலம் - ஊத்துக்குளி இடையே சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்த மோகன சுந்தரம், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஊத்துக்குளிபோலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
செங்கப்பள்ளி வடக்கு சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ், 34. தொழிலாளி. மதுப் பழக்கத்துக்கு அடிமையானார். இதிலிருந்து விடுபட திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். போதை பழக்கத்தை விட முடியாமல் தவித்த அவர், கடந்த 9ம் தேதி நள்ளிரவு வீட்டில், தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.