சிறுமியிடம் அத்துமீறியவர் கைது
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். கோவையில் தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வரும் நவநீதகிருஷ்ணன், 20 என்பவர் பழகி வந்தார். இரு நாட்கள் முன்பு பள்ளிக்கு அருகே நின்றிருந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வாலிபர் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், வாலிபரை 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.
விவசாயி தற்கொலை
ஊதியூர், நிழலியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 27; விவசாயி. நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தார். நேற்று காலை வீட்டின் கதவு திறக்கததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, நாச்சிமுத்து துாக்குமாட்டி இறந்து கிடந்தது தெரிந்தது. ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி தற்கொலை
வெள்ளகோவில், தீரன் சின்னமலை நகரை சேர்ந்தவர் சன்மதி, 17; திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், தனியார் தேர்வுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்பை தொடர முடியாத காரணத்தால், மனமுடைந்து இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத போது, துாக்குமாட்டி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒருவர் பலி;இருவர் படுகாயம்
வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 39, ராஜா, 38, ராமசாமி, 47 ஆகிய, மூவரும் தாசநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி ரோட்டில் உள்ள பால் சொசைட்டி அருகே நேற்று முன்தினம் நின்று பேசி கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த கார், மூன்று பேர் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ராமசாமி இறந்து விட்டார். மற்ற, இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவர் தற்கொலை
பொங்கலுார் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 40; டிரைவர். வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருட்டு;ஒருவரிடம் விசாரணை
பொங்கலுார் அருகே தாயம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி வடிவேலன், 40. வீட்டை பூட்டிவிட்டு தன் மாமனார் வீட்டுக்கு சென்றபோது, பூட்டை உடைத்து, 13.75 பவுன் நகை, ஒரு டூவீலர், 90 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினர். அவிநாசிபாளையம் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்கள் மாயம்
கொடுவாய் லட்சுமி நகரை சேர்ந்தவர் வசந்தி, 38; பனியன் கம்பெனி தொழிலாளி. ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை.
இதே போல பொங்கலுார் நாச்சி பாளையத்தை சேர்ந்தவர் நாகஜோதி, 40; பனியன் கம்பெனி தொழிலாளி. வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். புகாரின் பேரில் அவிநாசி பாளையம்போலீசார் விசாரிக்கின்றனர்.

