/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீக்கப்படாத இறந்தவர் பெயர்கள் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
/
நீக்கப்படாத இறந்தவர் பெயர்கள் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
நீக்கப்படாத இறந்தவர் பெயர்கள் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
நீக்கப்படாத இறந்தவர் பெயர்கள் அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
ADDED : டிச 08, 2024 02:46 AM

பட்டியல் சமர்ப்பித்த தி.மு.க.,
ஈஸ்வரமூர்த்தி, அவை தலைவர், வடக்கு நகர தி.மு.க.,:
கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பூத் ஏஜன்ட்கள் வாயிலாக பூத் வாரியாக, இறந்து போன வாக்காளர்கள் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் வாக்காளர் இறுதிப் பட்டியலுடன் தற்போது வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றை கட்சியின் மாவட்ட செயலாளர் வாயிலாக, தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளோம். இதில் பெரும்பாலான பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்கள் குறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். வாக்காளர் பட்டியல் செம்மையாக, முழுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுப்பதிவு புள்ளி விவரங்கள் முறையாக இருக்கும்.
மெத்தனம் என்கிறது அ.தி.மு.க.,
கண்ணபிரான், மாவட்ட செயலாளர், அண்ணா தொழிற்சங்க பேரவை:
இறப்பு விவரங்கள் பதிவு செய்யும் போதே, உள்ளாட்சி அமைப்புகளில், இறந்த நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான படிவம் 7 பெற்று கொள்ளும் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும். வாக்காளர் பெயர் நீக்கம் செய்வதற்கு குடும்பத்தினர் மட்டுமே மனு அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான படிவங்கள் அளிக்கப்பட்டாலும் தேர்தல் பிரிவினர் இதில் மெத்தனமாக உள்ளனர். இறந்தோர் பெயர் நீக்கம் செய்வதில் என்ன சிரமம் இருக்கிறது, ஏன் இதை செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போடுகின்றனர் என்பது புரியாத புதிர்.
வாக்காளர் பட்டியலில் முறையாக பெயர் நீக்கம், முகவரி, தொகுதி மாற்றம் போன்ற நடவடிக்கை மேற்கொண்டால், ஏறத்தாழ 30 சதவீதம் வரை வாக்காளர் எண்ணிக்கை, வாக்காளர் பட்டியலில் குறையும். ஓட்டுப் பதிவு சதவீதம் கட்டாயம் அதிகரிக்கும். அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் பிரிவினர் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
விரைவாக்கச் சொல்கிறது பா.ஜ.,
அருண், மாவட்ட செயலாளர், பா.ஜ.,:
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, இறந்த நபர்கள் பெயர் நீக்கம் செய்வதற்காக உரிய பட்டியல் தயார் செய்து தேர்தல் பிரிவில் வழங்கும் பணியை கட்சி சார்பில் மேற்கொண்டுள்ளோம். பூத் வாரியாக கட்சி முகவர்கள் இதை கள ஆய்வு செய்து, விவரங்கள் பெற்று, அதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து தேர்தல் பிரிவில் வழங்கி வருகிறோம்.
அதன் மூலம் தேர்தல் பிரிவினர் தங்கள் தரப்பிலும் கள ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இப்பணியை விரைவுபடுத்தப்பட வேண்டும்.
அதிகாரிகளை குறைசொல்லும் காங்.,
கோபால்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர், காங்.,:
இறந்த வாக்காளர் பெயர் நீக்கம் செய்வதை நேரடியாக கட்சியினர் செய்ய முடியாத நிலை உள்ளது. இறப்பு பதிவு செய்யும் போதே, இதற்கான படிவமும் பெற்று அதை பதிவு செய்ய வேண்டும்.
இதை உரிய உள்ளாட்சி அமைப்புகளும், தேர்தல் பிரிவும் மேற்கொள்ள வேண்டும். பெயர் நீக்கம் செய்ய 4, 5 முறை மனு அளித்தாலும், இதை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.
இதற்கு மெத்தனமும், பணிப்பளுவும் காரணமாக உள்ளது. பெயர் நீக்கம் செய்தால் ஏதும் சிக்கல் வந்து விடும் என சிலர் அச்சப்படும் நிலையும் உள்ளது. இறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் போதே, இறந்தவரின் ஆதார், வாக்காளர் பதிவு, ரேஷன் அட்டை விவரங்களும் நீக்கம் செய்யும் வகையில் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.