/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இரவில் ரோந்து
/
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இரவில் ரோந்து
ADDED : ஏப் 09, 2025 11:22 PM
திருப்பூர்; திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து, சாய, சலவை ஆலைகள் இயங்குகின்றன. ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த ஆலைகள், சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பது கட்டாயமாகிறது.
சுத்திகரித்த நீரை, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தவேண்டும்; சுத்திகரித்த நீர் அல்லது சுத்திகரிக்காத கழிவுநீரை வெளியேற்றக்கூடாது என்பது விதிமுறையாக உள்ளது.
சுத்திகரிப்பு செலவினங்களை தவிர்த்து, அதிக லாபம் ஈட்டுவதற்காக சில நிறுவனங்கள், சுத்திகரிக்காத சாயம், பிரின்டிங் கழிவுநீரை நொய்யலாறு, ஜம்மனை, சங்கிலி பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றன.
மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல், ஆங்காங்கே ரகசியமாக இயங்கும் பட்டன், ஜிப் நிறுவனங்கள், சாய ஆலைகளும், சாயக்கழிவுநீரை தேக்கிவைத்து, இரவு நேரங்களில் திறந்துவிடுகின்றன.
இரவில் திறந்துவிடப்படும் சாயக்கழிவு, பகல்வேளையில் பாய்ந்தோடி முடிந்துவிடுவதால், முறைகேடு நிறுவனங்களை தடம் பார்த்துச்சென்று தேடி கண்டுபிடிப்பதில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
இதையடுத்து, முறைகேடுகளை கண்டறிவதற்காக, திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய வடக்கு அலுவலக அதிகாரிகள், இரவு ரோந்து செல்லத்துவங்கியுள்ளனர். குறிப்பாக, நொய்யலாறு, நல்லாறு, ஓடை கரையோரங்களை பார்வையிடுகின்றனர்; ஆங்காங்கே நீர் மாதிரிகள் சேகரித்து, உடனுக்குடன் நீரின் தன்மையை பரிசோதிக்கின்றனர்.
சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏதேனும் நிறுவனங்கள் இயங்குகின்றனவா; நீர் நிலைகளில் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா என அலசி ஆராய்ந்துவருகின்றனர்.