/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியற்ற ஆலைகளால் திருப்பூரில் உருவாகிறது மாசு
/
அனுமதியற்ற ஆலைகளால் திருப்பூரில் உருவாகிறது மாசு
ADDED : ஜன 13, 2025 01:19 AM
திருப்பூர்: திருப்பூர் சாய ஆலைகள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கின்றன. ஒரு சொட்டு கூட சாயக்கழிவுநீரை வெளியேற்றாமல் இருப்பதால், 14 ஆண்டுகளில், சாயக்கழிவால் ஏற்பட்ட மாசு மறைந்தது.
இந்நிலையில், முறைகேடாக இயங்கும் சிறிய சாய ஆலைகள் மற்றும் 'பட்டன் -ஜிப்'களுக்கு சாயமிடும் பட்டறைகளால், மீண்டும் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.
'சாம்பிள் விஞ்ச்' மிஷினை கொண்டு சாயமிட்டு, சாயக்கழிவை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றும் விஷமச்செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பாதாள சாக்கடை இணைப்பு இருந்தால், அதன் வாயிலாக சாயக்கழிவு வெளியேற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாசுக்கட்டுப்பாடு வாரியம், தொடர் ஆய்வு நடத்தினாலும், குடியிருப்புகளுக்கு மத்தியில் முறைகேடாக இயங்கும் சாயப்பட்டறை, 'பட்டன் மற்றும் ஜிப்'களுக்கு சாயமிடும் பட்டறைகள் சவாலாக மாறியுள்ளன.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழில்துறையினர் கூறுகையில், 'சாய ஆலைகள், கடும் சிரமத்துடன், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வருகின்றன. முறைகேடான சாயப்பட்டறைகள் இயங்கியது தெரியவந்தால், அதிகாரிகள், மின் இணைப்பை மட்டும் துண்டிக்கின்றனர். மேல் நடவடிக்கை இல்லை.
கடந்த 14 ஆண்டுகளாக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. நடவடிக்கை இன்னும் கடுமையாக இருந்தால் மட்டுமே, முறைகேடான சாயப்பட்டறைகள் இயக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்' என்றனர்.