/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பரிசு பொருள்; மக்களிடம் குறைந்த ஆர்வம்
/
பொங்கல் பரிசு பொருள்; மக்களிடம் குறைந்த ஆர்வம்
ADDED : ஜன 18, 2025 12:20 AM
பல்லடம்,; பல்லடம் வட்டாரத்தில், பொங்கல் பரிசு பொருட்கள் வாங்க பொதுமக்கள் பெரிய அளவு ஆர்வம் காட்டவில்லை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர் களுக்கு, கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, இலவச வேட்டி சேலை ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே, இப்பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தன.
கடந்த காலங்களில், பொங்கல் தொகுப்புடன், பரிசுத் தொகை மற்றும் ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவையும் வழங்கப்பட்டன. இதன் காரணமாக, பொதுமக்கள் முன்கூட்டியே உஷாராகி டோக்கன் பெற்றுக்கொண்டு, பொங்கல் பரிசு மற்றும் தொகையை வாங்க முண்டியடித்தனர்.
ஆனால், இம்முறை நிதி நெருக்கடி காரணமாக, கரும்பு, சர்க்கரை மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், பண்டிகையையும் பொருட்படுத்தாமல், வழக்கமாக பரிசுத்தொகுப்பை வாங்க ரேஷன் கடைகளில் குவியும் பொதுமக்கள், இம்முறை ஆர்வம் காட்டவில்லை. மேலும், இலவச வேட்டி சேலையும் இருப்பு இல்லாததால், கார்டுதாரர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, பண்டிகைக்கு முந்தைய நாட்களில் மட்டும், ரேஷன் கடைகளில் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நாட்களில், எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு வாங்க ஆர்வம் காட்டவில்லை.
பொங்கல் தொகுப்பு வாங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், ரேஷன் கடைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.
இதனால், பொங்கல் பண்டிகை முடிந்தும், 50 சதவீத ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் பொருட்களை வாங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.