/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது!
/
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கியது!
ADDED : ஜன 09, 2025 11:33 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.
தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு மாநில அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியன அடங்கிய தொகுப்பு நேற்று கார்டுதாரர்களுக்கு வழங்கும் திட்டம் துவங்கியது. சென்னையில் முதல்வர் இத்திட்டத்தை துவங்கி வைத்ததையடுத்து, பல்லடம், கே.அய்யம்பாளையம் ரேஷன் கடையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.
கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் ரகுநாதன், துணை பதிவாளர் தேவி பங்கேற்றனர். மாவட்டத்தில் 7.99 லட்சம் கார்டுகளுக்கு இதனை வழங்கும் வகையில், 799 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரையும், தேவையான அளவு கரும்புகளும் கொள்முதல் செய்ய, 2.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடைகளில் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தினமும் 250 பேர் என்ற அளவில் இத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
* திருப்பூர் மாநகராட்சி, 49வது வார்டு, பாரதி நகர், ஆர்.கே., கார்டன் உள்ளிட்ட பகுதி ரேஷன் கடைகளில் மேயர் தினேஷ்குமார், பொங்கல் பரிசு வழங்கி துவக்கி வைத்தார். அதேபோல் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பகுதி வாரியாக தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று பரிசு தொகுப்பை வழங்கினர்.
* திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியிலுள்ள, 11 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரிசுத்தொகுப்பினை திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நகர தி.முக., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், நடராஜன் கமலக்கண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் பாட்ஷா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

