/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கவில்லை! ரேஷன் கடை முற்றுகை, மறியலால் பரபரப்பு
/
பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கவில்லை! ரேஷன் கடை முற்றுகை, மறியலால் பரபரப்பு
பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கவில்லை! ரேஷன் கடை முற்றுகை, மறியலால் பரபரப்பு
பொங்கல் பரிசு டோக்கன் கிடைக்கவில்லை! ரேஷன் கடை முற்றுகை, மறியலால் பரபரப்பு
ADDED : ஜன 09, 2024 01:05 AM

திருப்பூர்;பொங்கல் பரிசு பொருட்கள் பெற டோக்கன் கேட்டு, ரேஷன் கடை முற்றுகை, குளறுபடி கண்டித்து மறியல் என திருப்பூரில் நேற்று பரபரப்பு நிலவியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில், நாளை 10ம் தேதி முதல் பொங்கல் பரிசு வினியோகம் துவங்கவுள்ளது. இதற்காக பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் துவங்கியது.
இம்முறை ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பரிசானது, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் ஆகியோருக்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன., 7 முதல் 9 வரையிலான மூன்று நாட்களில், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்; 10 முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசினை உரிய ரேஷன் கடைகளில் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கவும், பயனாளிகள் வசதியாகச் சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளும் வகையிலும், டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. நேற்று திருப்பூர் நகரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் டோக்கன் பெற திரண்டனர்.
போராட்டம்
தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என பலரும் தேடினர். ஓடக்காடு பகுதி ரேஷன் கடை முன் திரண்ட பொதுமக்கள் பலரும் தங்களுக்கு டோக்கன் வரவில்லை எனக் கூறி கடையை முற்றுகையிட்டனர்.
லட்சுமி நகர், பிரிட்ஜ்வே காலனி பகுதியில் தங்களுக்கு டோக்கன் வரவில்லை எனக்கூறி ஏராளமானோர் கடையை முற்றுகையிட்டனர். ஆவேசத்தில் சிலர் ரோட்டில் மறியல் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அவர்களிடம் விளக்கம் கூறி அனுப்பி வைத்தனர். நகரில் பெரும்பாலான கடைகளிலும் இந்த நிலை காணப்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'பொங்கல் பரிசு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், டோக்கன் வழங்கும் போது, தகுதியான கார்டுதாரர்கள் எனக் கூறுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு கூட டோக்கன் வழங்கவில்லை. பல இடங்களிலும் இந்த குழப்பம் உள்ளது. தேவையற்ற முறையில் பொதுமக்களை அலைக்கழிக்கும் செயலாக உள்ளது,' என்றனர்.