ADDED : ஜன 02, 2025 06:15 AM

திருப்பூர்; தமிழகத்தில் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 180 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வரும், 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது. ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலானோர் பரிசு தொகுப்பு பெற ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்த்து, வினியோகத்தை சீர்படுத்தும் வகையில், கார்டுதாரர் களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம், டோக்கன் எண் விவரங்கள் அடங்கிய டோக்கன் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் பணியாளர்கள், நாளை முதல், கார்டுதாரர்களின் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்க உள்ளனர். டோக்கனின் குறிப்பிட்டுள்ள நாளில், ரேஷன் கடைகளுக்கு சென்று, பரிசு தொகுப்பு பெறலாம்.