sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மோசமான போக்குவரத்து கட்டமைப்பு: திணறும் பல்லடம்! மன உளைச்சலுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள்

/

மோசமான போக்குவரத்து கட்டமைப்பு: திணறும் பல்லடம்! மன உளைச்சலுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள்

மோசமான போக்குவரத்து கட்டமைப்பு: திணறும் பல்லடம்! மன உளைச்சலுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள்

மோசமான போக்குவரத்து கட்டமைப்பு: திணறும் பல்லடம்! மன உளைச்சலுக்கு ஆளாகும் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள்

1


ADDED : ஜூலை 25, 2025 11:44 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 11:44 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழில் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாதல் என, திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் பல்லடமும் ஒன்று.

விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, பஞ்சு நுால் மில்கள், விவசாயம், கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள் என, பலதரப்பட்ட தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன. தொழில்கள் ஒருபுறம் வேகமாக வளர்ந்து வர, அதற்கு இணையாக, மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கிராமப் பகுதிகளும் நகரங்களாக வளர்ந்து வருகின்றன.

தொழில், வேலை, வியாபாரம், கல்வி என, அனைத்து துறைகளாலும் வேகமாக வளர்ந்து வரும் பல்லடத்தின் முக்கிய பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல்தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், பொள்ளாச்சி, கொச்சி, உடுமலை, அவிநாசி என, முக்கிய நகரங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால், பல்வேறு மாநில, மாவட்ட வாகனங்களின் பிரதான வழித்தடமாக உள்ளது.

கடந்த காலத்தில், பல்லடத்தில் குறுகலாக இருந்த கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட வாகன விபத்துகள், உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, சமீபத்தில், நான்கு வழிச்சாலையாகவும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும், பல்லடத்துக்கு இந்த போக்குவரத்து கட்டமைப்பு போதாது என்பதே தொழில்துறையினர், பொதுமக்களின் கருத்தாக உள்ளது. பல்லடத்துக்கு, மேம்பாலமும், புறவழிச் சாலையும் கட்டாயம் தேவை என்பது, பல்வேறு தரப்பினரின் கோரிக்கை.

கடந்த, 15 ஆண்டுகளாக இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்லடத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, தொழில் துறையினர், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

'பைபாஸ்' அவசியம் சக்திவேல் (ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்):

பல்லடத்தின் தொழில் வளர்ச்சிக்கு, போக்குவரத்து கட்டமைப்பு மிக அவசியமாக உள்ளது. காரணம், தொழில் ரீதியாக மட்டுமன்றி, திருப்பூரை ஒட்டி உள்ளதால், பல்லடத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது.

இதனால், வாகன பெருக்கமும் அதிகரித்து, குறித்த நேரத்தில் எங்களது ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியாமல், திருப்பிக் கொண்டு வரவேண்டிய சூழலும் ஏற்படுகிறது. போதிய ரோடு வசதி இல்லாததே இதற்குக் காரணம். எனவே, பல்லடம் நகரப் பகுதிக்குள் மேம்பாலமும், புறநகர் பகுதியில், புறவழிச் சாலையும் கட்டாயம் தேவை. நீண்ட நாள் கோரிக்கையான இதை அரசு நிறைவேற்ற வேண்டும்.

வாகனங்கள் அதிகரிப்பு சுவாதி கண்ணன் (பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு செயலாளர்):

பல்லடத்தில் வாகன பெருக்கம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஆண்டுதோறும், 20 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கறிக்கோழி தொழில் சார்ந்த வாகனங்களும் அதிக அளவில் கேரளா செல்கின்றன.

எதிர்காலத்தில் இந்த ரோடு வசதி போதாது என்பதால், பல்லடம் நகரப் பகுதியில், பனப்பாளையம் - துவங்கி அண்ணா நகர் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.கனரக வாகனங்கள் பயன்படுத்த புறவழிச்சாலை அவசியம். தற்போதைய சூழ லில், உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டியது அவசர அவசியம்.

தீராத தலைவலி கோவிந்தராஜ் (தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்):

பல்லடம்பகுதி தொழில் நகரமாக உருவாகி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் மையப் பகுதியாக பல்லடம் நகரம் உள்ளது. இங்குள்ள கடும் போக்குவரத்து நெரிசல் என்பது, 15 ஆண்டுகளாக தீராத தலைவலியாக உள்ளது.

எங்களது சரக்கு வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசின் அறிவிப்புகள் அனைத்தும் கானல் நீராகவே உள்ளன. நகரப் பகுதியில் மேம்பாலம் அமைப்பதால், போக்குவரத்து ஓரளவு கட்டுக்குள் வரும்.

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதில் மாநில அரசுக்கு ஏதேனும் இடையூறு என்றால், பொள்ளாச்சி- மங்கலம் ரோட்டை இணைக்கும் வகையிலாவது பாலம் அமைக்க வேண்டும்.

நிறைவேறாத திட்டங்கள் வேலுசாமி (திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர்):

பல்லடத்தின் கீழ் இருந்த திருப்பூர், நகராட்சி, மாநகராட்சி ஆகி, மாவட்டமாகவும் உருவெடுத்துவிட்டது. ஆனால், பேரூராட்சியாக இருந்த பல்லடம், நகராட்சியாக மாறியும், தேவையான வசதி வாய்ப்புகள் இன்றி, தொழில் துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு, கோவை - -கரூர் பசுமைவழிச் சாலையை அறிவித்து, நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ளது.

அருகிலுள்ள தாராபுரத்தில்கூட, புறவழிச்சாலை மேம்பாலம் என, அனைத்தும் உள்ளது. ஆனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள பல்லடத்துக்கு எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பல்லடத்துக்கு, மேம்பாலமும், புறவழிச் சாலையும் அவசியம்.

புறவழிச்சாலை தேவை கண்ணையன் (தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு):

தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழில் நகரம் கோவை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவைக்குச் செல்லும் வாகனங்கள் அதிகரித்துள்ளன.

இதற்கு, பல்லடம் பிரதான வழித்தடமாக உள்ளதால், தேவையான போக்கு வரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

திருச்சி ரோட்டில் இருந்து கோவை ரோட்டை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இதேபோல், கோவை ரோட்டில்இருந்து திருப்பூர் ரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் வகையிலும் மற்றொரு புறவழிச் சாலையும் தேவை.

இவை இருந்தால்தான் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும். எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்


பானு பழனிசாமி (பல்லடம் வியாபாரிகள் சங்க செயல் தலைவர்): பல்லடத்துக்கு புற வழிச்சாலை அமைக்க வேண்டும் என, கடந்த, 25 ஆண்டுக்கு முன்பாகவே கோரிக்கை வைக்கப்பட்டது. கோவை- கரூர் பசுமைவழிச் சாலை எந்த நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை. இதற்கிடையே, ரிங் ரோடுகள் அமைக்க உள்ளதாக பேச்சு உள்ளது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசலால், பல்லடம் பகுதியில் அடிக்கடி விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் பல்லடத்துக்குள் வருவதையே தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. எனவே, நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு உண்டான கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

தொழில் வளர்ச்சி, வாகன போக்குவரத்து, மக்கள் தொகை பெருக்கம் இவற்றை கருத்தில் கொண்டு, பல்லடத்தின் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், கடந்த, 15 ஆண்டு காலமாக, வாகன போக்குவரத்து கட்டமைப்புக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு தீர்வு கிடைக்குமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us