ADDED : டிச 06, 2024 05:01 AM
திருப்பூர் : திருப்பூரில் இன்று துவங்குவதாக இருந்த மாநில கலைத்திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு மாநில கலைத்திருவிழா கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் வரும், 8ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தேர்வானவர்களுக்கு இது குறித்த விபரங்கள் பகிரப்பட்டன.
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது; பள்ளிகள் தொடர் விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநில போட்டி, அனைத்து மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க ஏதுவாக அமைய வேண்டும் என்பதால், நடப்பு வாரம் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாநில திட்ட இயக்ககம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'மாநில கலைத்திருவிழா புதிய அட்டவணைப்படி, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கோவையிலும், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருப்பூரிலும், 2025 ஜன., 4ம் தேதி கலைத்திருவிழா நடைபெறும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு ஜன., 3 மற்றும், 4ம் தேதி ஈரோட்டிலும், அதே நாளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு நாமக்கல்லிலும் மாநில கலைத்திருவிழா நடைபெறும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.