ADDED : செப் 23, 2024 12:45 AM

திருப்பூர், அம்மாபாளையத்தில் வசிப்பவர் நடராஜன்; வர்த்தகர்; இவரது மனைவி டாக்டர் மகாலட்சுமி. கல்லுாரியில் ஆங்கிலத்துறை தலைவர். இவர்களது மகள் அபிராகவ ஜோதி. அவிநாசிலிங்கம் பல்கலையில், பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கிறார்.
மகாலட்சுமி நம்மிடம் பகிர்ந்தவை:
உடுமலை அருகில் உள்ள கிராமம் தான் சொந்த ஊர். 2006ல் திருமணம் நடந்தது. பெண்கள் எப்போதும் நேர்மறையாக இருக்கக்கூடியவர்கள். பெண் குழந்தைகள்தான், குடும்பத்தின் பொக்கிஷம். 'பெண் குழந்தை மட்டும் போதாது; வீட்டிற்கு ஆண் வாரிசு தேவை' என என் உறவினர்கள் வலியுறுத்தினர்.
ஆண் - பெண் இருவரும் ஒன்றுதான் என திடமாக நானும், கணவரும் இருந்தோம். மகள் அபிராகவஜோதி, 14 வயதிலேயே ஹிந்தியில் டிகிரி முடித்து, நம்பிக்கையை காப்பாற்றினாள்.
சிறிது காலத்திற்கு பின்பு மகள் திருமணமாகி வேறு வீட்டிற்கு சென்று விடுவார். அப்போதும் அவள் எனக்கு மகள்தான். மகளுடைய குழந்தைகளையும் நான் பாசத்தோடு, பெண் குழந்தைகளின் பெருமைகளை கூறி வளர்ப்பேன். அனைத்து பெண்களும் சக்திகளே.
இன்றைய நவீன உலகில் பெண் குழந்தைகள் சமூக வலைதளங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் போட்டோ பதிவிடுவது, தெரியாத நபர்களுடன் ஆன்லைனில் பழகுவது ஆகியவை ஆபத்தானது. ஆகவே சக்திகள் தங்கள் சக்தியை தங்கள் வளர்ச்சிக்கும், தங்கள் குடும்ப வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு மகாலட்சுமி கூறினார்.
வாழ்க்கையின்சுடரொளி
''மகள் அபிராகவஜோதி எங்களுக்கு சிறந்த தோழியும், ஆசிரியராகவும் விளங்குகிறாள். என் சுக, துக்கங்களைப் பகிர்பவளாகவும், தந்தைக்கு மகிழ்ச்சியையூட்டுபவளாகவும் இருக்கிறாள்.என் வாழ்க்கையின் சுடரொளி, அவள்'' என்கிறார் தாய் மகாலட்சுமி.