/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீநகரில் மிக தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; பணம் செலுத்தியும் சீரமைக்காமல் 'குறட்டை'
/
ஸ்ரீநகரில் மிக தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; பணம் செலுத்தியும் சீரமைக்காமல் 'குறட்டை'
ஸ்ரீநகரில் மிக தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; பணம் செலுத்தியும் சீரமைக்காமல் 'குறட்டை'
ஸ்ரீநகரில் மிக தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்; பணம் செலுத்தியும் சீரமைக்காமல் 'குறட்டை'
ADDED : அக் 07, 2025 11:50 PM

திருப்பூர்; மின்கம்பத்தை உயரமாக மாற்றியமைக்க, 2.19 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியும், சக்தி தியேட்டர் மெயின் ரோடு - ஸ்ரீ நகர் சந்திப்பு பகுதியில் மின்கம்பி மிக தாழ்வாக செல்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர், சக்தி தியேட்டர் மெயின் ரோடு பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டதில், ரோடு உயரமாக மாறிவிட்டது. மேலும், மின்கம்பிகள் மிக தாழ்வாக மாறியதால், கனரக வாகனங்கள் சென்றவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கன்டெய்னர் லாரிகள் வந்தால், மின்கம்பி உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் கூறியபடி, 2.20 லட்சம் ரூபாய் செலுத்தி, ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை மின்கம்பம் உயரமாக மாற்றியமைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து 'யெஸ் இந்தியா கேன்' நிறுவன இயக்குனர் 'வால்ரஸ்' டேவிட் கூறியதாவது:
மின்வாரிய விதிகளின் படி, ரோட்டில் இருந்து மின்கம்பி 20 அடி உயரத்தில் இருக்க வேண்டும். ஸ்ரீசக்தி நகர் சந்திப்பு பகுதியில், சக்தி தியேட்டர் ரோட்டில், 14 அடி உயரத்தில் செல்கிறது. பொதுமக்கள் சார்பில், மின்கம்பத்தை உயரமாக மாற்றி அமைக்க வேண்டுமென, கோரிக்கை வைத்தோம்.
இதற்கான தொகை, 2,19,779 ரூபாயை செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர். பொதுமக்கள் நலனுக்காக மின்கம்பத்தை மாற்ற நாங்கள் பணத்தை செலுத்தினோம். ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், மின்கம்பத்தை மாற்றாமல் இழுத்தடிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, கலெக்டரிடம் அனுப்பிய மனுவுக்கு, விதிமுறைப்படி மின்கம்பி உயரமாக இருப்பதாக, பொய்யான தகவலை கூறியுள்ளனர். அதாவது, தவறான தகவலை கூறி, மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றியுள்ளனர். தமிழகஅரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இதுபோன்ற அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விரைவில் மாற்றப்படும்
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ''மின்கம்பி தாழ்வாக செல்வது குறித்து, உதவி செயற்பொறியாளரிடம் விசாரிக்கப்படும். மிக உயரமான மின் கம்பம் இருப்பு இல்லாததால், பணி தாமதமானது என்கின்றனர். இருப்பினும், ஒருவாரத்துக்குள், மின்கம்பம் உயரமாக மாற்றி அமைக்கப்படும்,'' என்றார்.