/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லுாரியில் 'புதையல் வேட்டை'; மாணவியர் உற்சாகம்!
/
கல்லுாரியில் 'புதையல் வேட்டை'; மாணவியர் உற்சாகம்!
ADDED : அக் 07, 2025 11:50 PM

பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த கலைத் திருவிழாவின் ஒரு பகுதியான 'புதையல் வேட்டை' நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
தமிழக அரசு, உயர்கல்வித்துறை சார்பில், பல்லடம் அரசு கல்லுாரியில், கல்லுாரி கலை திருவிழா நடந்து வருகிறது. அதில், இலக்கியம், அறிவியல், கட்டுரை, நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் கட்டப் போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட போட்டிகள் நேற்று துவங்கின. இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட 'புதையல் வேட்டை' நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் பாக்யலட்சுமி, புனிதவதி, நிப்ட்- டீ கல்லுாரி பேராசிரியை பிரபாகுமாரி மற்றும் திருப்பூர் ஸ்வரவாணி கலாலயா ஆசிரியர் சுபலட்சுமி ஆகியோர் தேர்வு குழுவாக செயல்பட்டனர்.
வண்ணங்களின் அடிப்படையில் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, வேட்டைக்கு தயாராகினர். கல்லுாரி உணவகம், நுாலகம், நுழைவு வாயில், ஆய்வகம் என, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த துருப்புச் சீட்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் புதையலை தேடினர். இறுதியில், மூன்று வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த புதையல் பரிசுகளை மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்கவும், இலக்கை நோக்கி சென்று வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தவும் 'புதையல் வேட்டை' நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, கல்லுாரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.