‘விசைத்தறியாளர் கூலி உயர்வு ஒப்பந்தப்படி வழங்க வேண்டும்’
‘விசைத்தறியாளர் கூலி உயர்வு ஒப்பந்தப்படி வழங்க வேண்டும்’
UPDATED : அக் 14, 2026 09:38 PM
ADDED : அக் 14, 2026 09:36 PM
திருப்பூர்: ‘‘கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, 2025 ஏப். 20ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும்’’ என, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிவுறுத்தியுள்ளார்.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையேயான கூலி உயர்வு ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், 2022ம் ஆண்டு ஒப்பந்தக் கூலியுடன் சோமனுார் ரகத்துக்கு 15 சதவீதமும், பிற ரகங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுடன் தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியைக் குறைத்து வழங்கவோ, குறைத்து பெறவோ கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஒப்பந்தக் கூலி உயர்வை முழுமையாக வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்த நிலையில், இருதரப்பினருடன் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில், ஒப்பந்த அறிவுரைகளைப் பின்பற்றி தொழில் அமைதி, நல்லுறவைப் பேண ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொழிலாளர் கூடுதல் கமிஷனர் தர்மசீலன், ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ், தொழிலாளர் உதவி கமிஷனர் லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
