/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாயுமானவர் திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்கள்'
/
'தாயுமானவர் திட்டத்தில் நடைமுறைச் சிக்கல்கள்'
ADDED : ஆக 18, 2025 10:39 PM
திருப்பூர்; ரேஷன் கடைகள் வாயிலாக, குடும்ப அட்டைக்கு பொருட்கள் பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கு வீடு தேடிச் சென்று நேரடியாக பொருட்கள் வழங்க 'தாயுமானவர்' திட்டம், அனைத்து பகுதிகளிலும் கடந்த 12ல் நடை முறைக்கு வந்தது.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: அடுத்த மாதம் முதல், மாதம் தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மீண்டும் ஊழியர்கள் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கான செலவினங்களை, அடுத்த மாதம் முதல் ரேஷன் கடை நடத்தும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடையிலிருந்து பொருட்களை கணக்கிட்டு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, சுமை தொழிலாளி, டிரைவர், கடை ஊழியர், உதவியாளர் என நான்கு பேர் பயணிக்க வேண்டியுள்ளது. பயனாளிகள் வீடுகளில் இருந்து பொருட்களை வழங்கினால் சரி.
அவர்கள் இல்லாவிட்டால், வரவழைத்து பொருளை வழங்க வேண்டும். வெயில் நேரத்தில் திறந்த வெளியில், பி.ஓ.எஸ்., கருவி பயன்படுத்துவது, ரேகை பதிவு செய்வது சிரமமாக உள்ளது. நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது.
பொருட்களை எடையிட்டு பையில் போட்டுத் தரும் போது, முதியோர் எடுத்துச் செல்ல ஊழியர் தான் கட்டாயம் உதவி செய்ய வேண்டியுள்ளது.
திட்டப்படி 60 முதல் 70 பேருக்கு பொருட்கள் வழங்க வேண்டும்; ஆனால், 20 பேருக்கு மட்டும் தான் வழங்க முடிகிறது. மற்றவர்கள் வழக்கம் போல் கடையில் வந்து தான் வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.