/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலகுமலை ஜல்லிக்கட்டு; முழுவீச்சில் ஏற்பாடுகள்
/
அலகுமலை ஜல்லிக்கட்டு; முழுவீச்சில் ஏற்பாடுகள்
ADDED : பிப் 13, 2025 07:12 AM

திருப்பூர்; அலகுமலையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கடந்த, 5 ஆண்டுகள் முன், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, அத்தடையை நீக்க வேண்டும் என்ற போராட்டம் மாநிலம் முழுக்க வெடித்தது. அதன் விளைவாக, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன; அதற்கான அனுமதியும் எளிதாக வழங்கப்பட்டது.
800 காளைகள் பங்கேற்கும்
திருப்பூர் அலகுமலையில், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டு, கடந்த, 5 ஆண்டுக்கு முன், முதன் முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருப்பூரை ஒட்டிய கிராமப்புறமான இங்கு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, பெரும் ஆதரவை பெற்றது.
ஆண்டுதோறும், 800 காளைகள் வரை பங்கேற்கின்றன. இந்தாண்டும், 800 காளைகள் வரை பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த, 9ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறுக்கிட்டது. அங்கு, தேர்தல் பணியில் போலீசார் ஈடுபடுவர் என்பதால், ஜல்லிக்கட்டு தேதியை ஒத்தி வைக்குமாறு, மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியிருந்தது.
வரும், 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வசதியான இடத்தில் போட்டி நடத்த ஏதுவாக இம்முறை அலகுமலை அருகே தொமுட்டிபாளையம் பகுதியில், போட்டி நடத்தப்பட இருக்கிறது.
ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் அமர்வதற்கு மாடம், மேடை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.
போலீஸ் கண்காணிப்பு
நேற்று முதலே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில், அவிநாசிபாளையம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வர் என்பதால், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவற்றை திட்டமிட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில், போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஏற்பாடுகளுக்காக மையத்தடுப்பு உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துள்ளனர்.