/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலை கிராம குழந்தைகளின் துவக்க கல்வி கேள்விக்குறியானது! பள்ளி கட்டடம் கட்டுவதில் இழுபறி
/
மலை கிராம குழந்தைகளின் துவக்க கல்வி கேள்விக்குறியானது! பள்ளி கட்டடம் கட்டுவதில் இழுபறி
மலை கிராம குழந்தைகளின் துவக்க கல்வி கேள்விக்குறியானது! பள்ளி கட்டடம் கட்டுவதில் இழுபறி
மலை கிராம குழந்தைகளின் துவக்க கல்வி கேள்விக்குறியானது! பள்ளி கட்டடம் கட்டுவதில் இழுபறி
ADDED : ஆக 07, 2025 09:13 PM

உடுமலை; உடுமலை அருகே குருமலை, குழிப்பட்டி மலை கிராமத்தில் பள்ளிகட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணிகள் துவக்கப்படாமல் இருப்பதால் அக்குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும், மலை கிராம மக்கள் கல்வியறிவு பெற, அப்பகுதிகளிலுள்ள துவக்கப்பள்ளிகளே ஆதாரமாக உள்ளன.
பள்ளிகளுக்கு நிரந்தர கட்டடம் உள்ள கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பிறகே, படிப்பதற்கு அப்பகுதி குழந்தைகள் வரத்துவங்கினர்.
தற்போது உடுமலை வனச்சரகத்தில்,குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு மற்றும் கோடந்துாரிலும், அமராவதி வனச்சரகத்தில்,தளிஞ்சியிலும், அரசு துவக்க பள்ளி தலா ஒன்று உள்ளது.
தளிஞ்சி, கோடந்துார், மாவடப்பு பகுதிகளில், பள்ளி வகுப்பறை, சத்துணவு கூடம் என கட்டமைப்புகள் உள்ளன.
குருமலை மற்றும் குழிப்பட்டி பகுதிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான அடிப்படை பள்ளி கட்டடம் என எதுவும் தற்போது இல்லை. குழிப்பட்டியில் இருந்த பள்ளி கட்டடம் முறையாக பராமரிக்கப்படாமல், இடிந்து விட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு கருதி, தற்காலிக கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய வசதிகள் இல்லாததால், பள்ளிக்கு செல்ல அப்பகுதி குழந்தைகள் தயக்கம் காட்ட துவங்கினர்.
நிதி ஒதுக்கீடு இதையடுத்து, பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கேற்பகடந்த கல்வியாண்டில் குருமலை, குழிப்பட்டியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
மலைகிராமங்களில் இப்போது பள்ளி செல்லும் வயதிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் சராசரியாக உயர்ந்து வருவதால், கட்டடம் அடிப்படையாகவும் அவசிய தேவையாக உள்ளது.
அடிப்படை கல்வி கற்க வேண்டுமென மலைகிராம மக்களும் ஆர்வம் காட்டுகின்றனர். மலைப்பகுதியிலேய பள்ளி இருக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அதற்கான வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அலட்சியமாக உள்ளது.
குருமலை, குழிப்பட்டி இரண்டு பகுதிகளிலும் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு, தலா 28 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பகுதிகளிலும், தலா பத்துக்கும் மேற்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். அப்பகுதிகளில் பள்ளி கட்டடம் இல்லாததால், ஆசிரியர்களும் அந்த மலை கிராமங்களுக்கு செல்வதற்கு தயங்கி வந்தனர்.
அப்பகுதியில் நியமிக்கப்பட்டாமலும் மாறுதல் கோரி வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். நடப்பாண்டில் அப்பள்ளிகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் படிப்பதற்கு பள்ளிக்கட்டடம் இல்லை.
அவர்களுக்கு முறையாக கல்வி கற்பதற்கென எந்த வசதியையும் அரசு ஏற்படுத்தித்தராமல் இருப்பதால், குழந்தைகள் கல்வியை கைவிட்டு, மீன்பிடிப்பது, பெற்றோருக்கு உதவியாக பணிக்கும் செல்கின்றனர்.
மலைப்பகுதி குழந்தைகளின் கல்விக்கு, அரசே முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது. நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பல மாதங்களாகியும் கட்டடம் கட்டுவதற்கு வனத்துறை அனுமதி வழங்காமல் உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசு முக்கியத்துவம் தரணும் கல்வித்துறையினர் கூறியதாவது:
பள்ளி கட்டடம் கட்டுவதற்கு வனத்துறையினரிடம் பலமுறை அனுமதி கேட்கப்பட்டது. எப்போது கேட்டாலும், வனப்பகுதியில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் யாரும் வருவதில்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.
மலைவாழ் குழந்தைகளின் அடிப்படை கல்வியை மேம்படுத்த, அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.