/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் பாராட்டு; தொழில்துறை உற்சாகம்
/
பிரதமர் பாராட்டு; தொழில்துறை உற்சாகம்
ADDED : ஏப் 12, 2025 11:07 PM
திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், தினமும் 13 கோடி லிட்டர் சாய கழிவுநீரை பொது மற்றும் தனி சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கின்றன.
நம் நாட்டில், வேறு எங்கும் இல்லாத வகையில், 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம், இங்குதான் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம், நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் வெளியேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
பொது சுத்திகரிப்பு நிலையங்களில், கழிவுநீர், 90 சதவீதம் அளவுக்கு, சுத்தமான தண்ணீராக பிரித்து எடுத்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 10 சதவீத கழிவில் இருந்து, அடர் உப்பு கரைசல் பிரிக்கப்படுகிறது; மீண்டும் குழாய் மூலம் எடுத்துச்சென்று, சாயமிட பயன்படுத்துகின்றனர்.
எஞ்சியுள்ள கழிவு, உப்பாகவும் மாற்றப்படுகிறது; இறுதியாக நீக்கப்படும், 'ஸ்லெட்ஜ்' கழிவு, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கலவை உப்பு எதற்கும் பயன்பாடு என்பதால், அவற்றை சுத்திகரித்து கடலில் கலக்கும் திட்டம் குறித்து, மாநில அரசு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாடும், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி, மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடந்து வருகிறது. அதன்படி, 120வது நிகழ்ச்சி, கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. அப்போது பேசிய பிரதமர், ஜவுளி மறுசுழற்சி தொழில்நுட்பம், சுத்திகரிப்பு நிலையம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதாக பாராட்டினார். நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, திருப்பூருக்கென தனி அடையாளம் உருவாகியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.
ஜவுளிக்கழிவுகளை மீண்டும் ஜவுளியாகவும், வீட்டு உபயோக பொருட்களாகவும் மாற்றும், 'சர்குலாரிட்டி' தொழில்நுட்பம் குறித்தும் பாராட்டினார்.
பிரதமரின் பாராட்டு, ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துறையினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

