/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை! மாநகராட்சி பட்ஜெட் முன் தயாரிப்பு கூட்டத்தில் கருத்து
/
நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை! மாநகராட்சி பட்ஜெட் முன் தயாரிப்பு கூட்டத்தில் கருத்து
நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை! மாநகராட்சி பட்ஜெட் முன் தயாரிப்பு கூட்டத்தில் கருத்து
நகர வளர்ச்சிக்கு முன்னுரிமை! மாநகராட்சி பட்ஜெட் முன் தயாரிப்பு கூட்டத்தில் கருத்து
ADDED : மார் 18, 2025 04:46 AM

திருப்பூர் : திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு மற்றும் சாலை பராமரிப்பு உட்பட நகரின் வளர்ச்சி பணிகள் குறித்து திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்று, திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் முன் தயாரிப்பு ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு கருத்து முன் வைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியின் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்தயாரிப்பு ஆலோசனை கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை கமிஷனர் சுந்தரராஜன், துணை மேயர் பாலசுப்ரமணியம், நிதிக்குழு தலைவர் கோமதி, கவுன்சிலர் குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்டங்கள் வேண்டும்!
அன்பகம் திருப்பதி (மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர்):
நகரப் பகுதியில் பாதசாரிகள் பயன்பாட்டுக்கு அமைத்துள்ள நடை மேம்பாலங்கள் முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தலாம். மாநகராட்சிக்கு வருவாயை பெருக்க, பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகள், மார்க்கெட், டவுன்ஹால் பார்க்கில் ஆகியன நடைமுறைக்கு வரவில்லை. இவற்றை வாடகைதாரர்களுக்கு குறைந்த டெபாசிட் வைத்து வாடகைக்கு விடலாம். ஆண்டிபாளையம் படகு இல்லத்தில், பொதுமக்களை மேலும் கவரும் வகையில் வண்ண விளக்கு அலங்காரம் உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி, அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவையும் சீரமைக்க வேண்டும்.
பள்ளிகளில் துாய்மைப்பணிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அதே போல், பள்ளி மைதானங்களில் நடைப் பயிற்சிக்கான சிறப்பு தளங்கள் மற்றும் பசுமை அமைப்பு தன்னார்வலர்கள், நடைப் பயிற்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தலாம். மக்கும், மக்காத குப்பை என தரம்பிரித்து வாங்கினால் மட்டுமே, குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதனை ஊக்குவிக்கும் வகையில் பொதுக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லுாரி மாணவர்ளை ஈடுபடுத்துதல், முறையாக வழங்குவோருக்கு ஊக்கப் பரிசு வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்தலாம்.
மின் கம்பம், தெரு விளக்குகளுக்கு 'க்யூஆர்' கோடு வழங்கும் திட்டம், மூன்று பட்ஜெட் கடந்து நடைமுறைப்படுத்தவில்லை. பல ரோடுகள் படுமோசமாக உள்ளன. அவற்றை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காங்கயம் கிராஸ் ரோடு - உஷா தியேட்டர் பகுதி, புதிய பஸ் நிலையம், மாநகராட்சி ஆபீஸ் முன் சிறிய அளவில் 'பிளை ஓவர்' கட்டலாம்.
வரி விதிப்பை முறைப்படுத்தணும்!
ரவிச்சந்திரன் (இ.கம்யூ., குழு தலைவர்):
கடந்த, 3 பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், அனைத்தையும் விரைந்து செய்து முடிக்க வேண்டும். பாதாள சாக்கடை, 4 வது குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக தாமதமின்றி முடிக்க வேண்டும். மாநகராட்சி முழுவதும் உள்ள 'ரிசர்வ்' சைட்கள் குறித்து உரிய ஆய்வு செய்து அவற்றை கையகப்படுத்தி, உரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நகரின் பிரதான பகுதிகளில் மேம்படுத்திய பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் அமைக்க வேண்டும்.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்கான சொத்து வரியின வசூலில் காட்டும் வேகத்தை, 'பார்'கள், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உள்ள கேளிக்கை விடுதிகள், வணிக ரீதியான கட்டடங்களில் முறையான, முழுமையான வரியினங்களை விதித்து அதை வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கருத்துகள் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
'ஆக்கப்பூர்வமான கருத்துகள் அடிப்படையில் பட்ஜெட்டில் அவை சேர்க்கப்படும்,' என்று மேயர் குறிப்பிட்டார்.