/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடை செய்யப்பட்ட பகுதி சுகாதாரத்துறை அறிவிப்பு
/
தடை செய்யப்பட்ட பகுதி சுகாதாரத்துறை அறிவிப்பு
ADDED : மார் 20, 2024 12:06 AM

பல்லடம், மார்ச் 20--
பல்லடம் நகரத்துடன், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகள் இணைகின்றன. பல்லடம், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தொழில் வர்த்தக ரீதியாக முக்கிய வழித்தடமாக உள்ளது.
அடிக்கடி கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள், ஆடு, மாடு, கோழிகள், முட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என, பலதரப்பட்ட வாகனங்களும் இவ்வழியாக வந்து செல்கின்றன.
இவற்றில், சட்டவிரோதமாக கோழி இறைச்சி கழிவுகள், அழுகிய முட்டைகள், காய்கறிகள், பிளாஸ்டிக் குப்பைகள் ஆகியவற்றை நெடுஞ்சாலை ஓரங்களிலும், பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. ஆள் அரவமற்ற பகுதிகளில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்கின்றன.
இவற்றால், நீர் நிலைகள் மற்றும் பாசன மாசடைவதுடன், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் முயற்சியாக, சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
அவ்வகையில், பல்லடம்- - மங்கலம் ரோட்டில், 'தடை செய்யப்பட்ட பகுதி' என, சுகாதாரத்துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இதில், கோழி கழிவுகள், இறந்த கோழிகள் கொட்ட வேண்டாம். மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில், கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடந்து வரும் சூழலில், சுகாதார துறையின் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், இது வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை முயற்சிக்க வேண்டும்.

