/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய நிலத்தில் அடர்வனம் உருவாக்க திட்டம்: ஒரு ஏக்கரில் 3,870 மரக்கன்றுகள் நடவு
/
விவசாய நிலத்தில் அடர்வனம் உருவாக்க திட்டம்: ஒரு ஏக்கரில் 3,870 மரக்கன்றுகள் நடவு
விவசாய நிலத்தில் அடர்வனம் உருவாக்க திட்டம்: ஒரு ஏக்கரில் 3,870 மரக்கன்றுகள் நடவு
விவசாய நிலத்தில் அடர்வனம் உருவாக்க திட்டம்: ஒரு ஏக்கரில் 3,870 மரக்கன்றுகள் நடவு
ADDED : அக் 30, 2025 11:08 PM

உடுமலை:  உடுமலை அருகே, விவசாய நிலத்தை அடர் வனமாக மாற்றும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கரில், 90 வகையான, 3,870 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும், ஏழு ஏக்கர் பரப்பளவில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 11வது திட்டத்தில், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், உடுமலை அருகே விவசாய நிலத்தை அடர் வனமாக்கும் வகையில், மியாவாக்கி எனப்படும் அடர் நடவு முறையில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.
உடுமலை ஆண்டியகவுண்டனுார் கிராமத்தைச்சேர்ந்த, விவசாயி பிரதீப் குமார், தனது நிலத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் 'மரங்கள் வளர்க்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருவதோடு, தனது 8 ஏக்கர் விவசாய நிலத்தை அடர் வனமாக மாற்றும் திட்டத்தை தற்போது துவக்கியுள்ளார்.
இம்முறையில், ஒரு அடிக்கு ஒரு அடி என்ற வீதம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. குருந்தை, ஆவாரை, கடுக்காய், இரு நொச்சி, விடைத்தலான், வவ்விலவு, சூரிப்பழம், வபாந்தம்புளி, செங்கொன்றை, கருப்பு குண்டுமணி, ஆடாலி, சொக்கலை, வக்கனை, பதிமுகம், கல் மூங்கில், குரங்கு பழம், நெய்க்கொட்டான், செவ்வகில், முருகன் மரம், பிரம்பு, திருவோடு, சிவகுண்டலம், மருதோன்றி, அலிஞ்சில், விடத்தலான் என, மண்ணின் மரபு சார்ந்த 90 வகையான, 3,870 மரக்கன்றுகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அரியதாக மாறியுள்ளதும், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரக்கன்றுகளை தேடிப்பிடித்து, தற்போது அடர் வனமாக மாற்றும் முயற்சியில், வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் மற்றும் விவசாயி பிரதீப்குமார் ஈடுபட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, நடவு செய்யும் போது, ஒவ்வொரு மரக்கன்றுகளும் போட்டி போட்டு, மரமாக வளர்வதோடு, மலைப்பகுதியிலுள்ள அடர்ந்த வனம் போல், மாறும் சூழல் உள்ளது.
இதே போல், மேலும் ஏழு ஏக்கர் பரப்பளவில் அடர் வனம் உருவாக்கும் வகையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வரை இத்திட்டத்தின் அடுத்தடுத்து நடப்பட உள்ளதாகவும் திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

