/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நன்செய் நிலங்களை பாதுகாக்க திட்டம்; அமராவதி ஆயக்கட்டில் தேவை
/
நன்செய் நிலங்களை பாதுகாக்க திட்டம்; அமராவதி ஆயக்கட்டில் தேவை
நன்செய் நிலங்களை பாதுகாக்க திட்டம்; அமராவதி ஆயக்கட்டில் தேவை
நன்செய் நிலங்களை பாதுகாக்க திட்டம்; அமராவதி ஆயக்கட்டில் தேவை
ADDED : அக் 18, 2024 10:19 PM

உடுமலை : அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், நன்செய் நிலங்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீர்ப்பாய்ச்சல் ஆதாரம் மிகுந்து, நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்படும் நிலங்கள் நன்செய் நிலங்கள் எனப்படுகிறது.
இவ்வகை நிலங்களை பாதுகாக்க, மத்திய அரசு, நன்செய் நிலங்களுக்கென தனியாக இணையதளத்தை உருவாக்கி, அதில், அனைத்து மாநிலத்திலுள்ள, நன்செய் நிலங்களின் விபரங்களை சேர்த்து வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதி, முக்கிய நன்செய் நில கேந்திரமாக உள்ளது. இங்குள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அணையிலிருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதில், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு பகுதிகளில், 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முப்போகம் நெல் விளைவிக்கப்பட்டு வந்த இப்பகுதியில், பல்வேறு காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறையும் சூழல் உருவாகியுள்ளது. நன்செய் நிலங்கள், லே - அவுட்களாக மாற்றப்படுகிறது; பல்வேறு கட்டுமானங்களுக்காக அவற்றின் இயல்பு தன்மை மாற்றப்படுகிறது.
தற்போது, இந்த ஆயக்கட்டு பகுதியில், அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அடிப்படையில், குறுகிய கால நெல் ரகங்களை தேர்வு செய்து நடவு செய்கின்றனர்.
குறிப்பாக, 90 - 110 நாட்களில், அறுவடைக்கு தயாராகும், நெல் ரகங்களே இப்பகுதி விவசாயிகளின் முக்கிய தேர்வாக உள்ளது.
சீசன் சமயங்களில், பாசன மேலாண்மை, நெல் விதை மற்றும் இடுபொருட்கள் வினியோகம், தொழில்நுட்ப ஆலோசனை, புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துவது, அறுவடை மற்றும் இருப்பு வைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே நன்செய் நிலங்களை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.