/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி ஊக்குவிப்பு
/
சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி ஊக்குவிப்பு
ADDED : அக் 13, 2024 11:49 PM

திருப்பூர்: ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, துணிநுால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணிநுால் துறை பணிகளை மேற்கொள்ள, தனியே இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம், திருப்பூர், மதுரை, கரூர் ஆகிய மண்டலங்களுடன், ஜவுளித்துறை, மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு அளித்து வருகிறது.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், இத்துறை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் துவங்க ஊக்குவித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறை இடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்ற நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, துணிநுால் துறை ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்த, இயக்குனர் லலிதா அறுவுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
வேகமாக வளர்ந்து வரும் ஜவுளித்தொழிலின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், திறன் மிக்க பணியாளர்களை உருவாக்க வேண்டும். தொழில் பயிற்சி அளிக்கும் நிலையங்கள், தொழிற்சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.ஜவுளித்துறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடையே, தொழில்நுட்ப ஜவுளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துணி நுால் துறை திட்டம் வகுத்து வருகிறது.
ஜவுளி பொருட்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்தும் வகையில், பன்னாட்டு வணிக மேலாண்மைகளை ஆராய்ந்து, வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்கவும், மண்டலம் வாரியாக ஜவுளி நுட்பங்களை வெளிப்படுத்தவும், 'டிஜிட்டல்' தளங்களை மேம்படுத்தவும், துணி நுால் துறை களமிறங்கியுள்ளது.
ஜவுளித்துறை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தின், ஐந்தாவது தளத்தில் உள்ள, துணிநுால் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை, 0421 2220095 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
- துணி நுால் துறை அதிகாரிகள்.