ADDED : டிச 01, 2024 11:19 PM

சொத்து வரி உயர்வு விவகாரம், திருப்பூர் மாநகராட்சியை, 'புயல்' ஆக மையம் கொண்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டதோடு, மறியலிலும் ஈடுபட்டனர். தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூ., - காங்., கவுன்சிலர்களும் மறியலில் குதித்தனர்.
மறியல் போராட்டத்தின் போது, போலீசாரின் நடவடிக்கைகள் தி.மு.க., கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அன்று மாலையே அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி நிர்வாகிகள், சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டியும், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்தும், அத்துமீறிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர்.
அ.தி.மு.க., சார்பில் நாளை உண்ணாவிரதமும், தே.மு.தி.க., சார்பில் 4ம் தேதி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட உள்ளன. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளன. திருப்பூர் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பிலும் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கரையைக் கடக்குமா சொத்து வரி விவகாரப் 'புயல்?'
தி.மு.க., கூட்டணிக்கட்சிகள் ஆலோசனைக்கு பின் முடிவு
கிருஷ்ணன், மாநகர் மாவட்ட தலைவர், காங்.,: ஏற்கனவே மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. திருப்பூரில் தொழில் மற்றும் வர்த்தகம் முன்போல் இல்லை. கடந்த 10 ஆண்டாக படிப்படியாக உயர்த்தியிருக்க வேண்டிய வரியை ஒட்டு மொத்தமாக உயர்த்தியது பெரும் தவறு. வரும் 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
முத்துக்கண்ணன், மாவட்ட செயலாளர், மா.கம்யூ.,:மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பிரதான தொழில்கள் முதல் சிறு, குறு தொழில்களும் பெரும் சிரமத்தில் உள்ளன. மின் கட்டணம், சொத்துவரி, தொழில் வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை கட்டணம் ஆகியன உயர்த்தப்பட்டுள்ளது; மேலும் பாதிப்பை அதிகரிக்கும். ஆண்டுதோறும் வரி உயர்வு என்பது மேலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அரசு இவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
'கபட நாடகம்' என சொல்வதா? ; மேயருக்கு அ.தி.மு.க., மறுப்பு
அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி(அ.தி.மு.க.,) தலைவர்:
கடந்த, 2022ல், சொத்துவரி, குப்பை வரி உயர்த்தப்பட்ட போது, கம்யூ., கவுன்சிலர்கள் ஆதரித்தனர்; எதிர்ப்பு தெரிவித்த எங்களிடம், 'உங்கள் ஆட்சியில், 10 ஆண்டுகள் வரி உயர்த்தவில்லை; வளர்ச்சி பணி நடக்க வரி உயர்வு வேண்டுமே' என்றனர்.
அதன் பிறகும், ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீத வரி உயர்வு செய்யும் தீர்மானத்துக்கும் ஆதரித்தனர். அப்போது, அனைத்து கவுன்சிலர்களிடமும் கருத்துகேட்க வேண்டுமென வலியுறுத்தினோம்; அவ்வாறு செய்திருந்தால், தீர்மானம் நிறைவேறியிருக்காது.
சொத்துவரி மட்டுமின்றி, பாதாள சாக்கடை டிபாசிட், கட்டட உரிம கட்டணம் பல மடங்கு அதிகமாகிவிட்டது. உரிமம் பெறுவதற்கு தனியே வீட்டுக்கடன் வாங்க வேண்டுமென, மக்கள் புலம்புகின்றனர். வரி உயர்வு தொடர்பாக, புதிய கமிஷனருடன் மேயர் பேசுவது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. எங்களை 'கபட நாடகம்' என்று மேயர் கூறுவது பொருத்தமற்றது. தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடுவது பொய்யானது என்பதை மக்கள் அறிவர்.
அண்ணாமலை ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை: பா.ஜ.,
செந்தில்வேல், வடக்கு மாவட்ட தலைவர், பா.ஜ.,:
மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. பா.ஜ.,வினர் உற்சாகத்தில் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலை நோக்கி களப்பணியில் மும்முரமாக ஈடுபட உள்ளோம்.
சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வு தொடர்பாக பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு செய்து, கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மற்ற கட்சியினர் போராட்டம் செய்தனர். ஒரே நேரத்தில், ஒரே விஷயத்துக்காக எல்லோரும் கவனம் கொடுத்தால், யார் போராடுகின்றனர் என்றே தெரியாது. நாங்கள் பெயருக்கு மறியல், போராட்டம் செய்ய விரும்பவில்லை. மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி போராட்டம் போன்றவற்றை நடத்த உள்ளோம்.
மாநில தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, இந்த வரியை குறைக்க அவரின் ஆலோசனைப்படி அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
வருவாய் போதவில்லை என்று கூறி தான் மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. மாநகராட்சி வருவாய்க்காக மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பிச்சை எடுத்து மாநகராட்சிக்கு கட்டுவதோடு. அந்த போராட்டத்தின் போது, இந்த பணம், மாநகராட்சிக்கு மட்டுமல்ல... அங்குள்ள கவுன்சிலர்களின் ஊழல்களுக்கு சேர்ந்தும் பிச்சை போடுகிறோம் என்று ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சீமான் 4ல் காங்கயம் வருகை; கட்சியினருடன் ஆலோசிக்கிறார்
சுரேஷ்பாபு, மாநில இணைச்செயலர், தொழிற்சங்கப்பேரவை, நாம் தமிழர் கட்சி: ''மக்களுக்கு எதிரான வரியை விதிப்பதில் ஆர்வமாக உள்ளனர். ஜி.எஸ்.டி., சிறு வணிகர், பெரிய வணிகர்களை பாதித்துள்ளது; வரி உயர்த்தினால் விலையேற்றம் ஏற்படும்; வாடகை நிச்சயம் உயரும். தவறான கொள்கையை நோக்கி அரசு பயணிக்கிறது.
சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும். வரும், 4ம் தேதி, கட்சி தலைவர் சீமான் திருப்பூர் வருகிறார்; காங்கயத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். திருப்பூரில் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து, முடிவெடுக்கப்படும்,' என்றார்.
----------------------------------------
த.வெ.க., போராட திட்டம்; கட்சி தலைமை அறிவிக்கும்
ராஜசேகர், தெற்கு மாவட்ட இணை செயலாளர், தமிழக வெற்றிக்கழகம்:
மக்களை பாதிக்கும் எந்த வரி உயர்வுக்கும் த.வெ.க., எதிராக நிற்கும். மக்களுக்கு ஆதரவாக போராடும். கட்சி தலைமைக்கு நிலை எடுத்துக்கூறியுள்ளோம். உத்தரவு, அறிவிப்புக்கு பின் போராட்டம் குறித்து முடிவெடுத்து, அறிவிக்கப்படும்