/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி உயர்வு: வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி.,; போராட்டத்துக்கு வணிகர்கள் ஆயத்தம்!
/
சொத்து வரி உயர்வு: வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி.,; போராட்டத்துக்கு வணிகர்கள் ஆயத்தம்!
சொத்து வரி உயர்வு: வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி.,; போராட்டத்துக்கு வணிகர்கள் ஆயத்தம்!
சொத்து வரி உயர்வு: வாடகை கட்டடத்துக்கு ஜி.எஸ்.டி.,; போராட்டத்துக்கு வணிகர்கள் ஆயத்தம்!
ADDED : டிச 03, 2024 11:46 PM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி உயர்வு, வாடகை கட்டடங்களுக்கா, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வரி விதிப்பால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு, பாதிப்புகளை உணர்த்தும் வகையில், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், ரமணாஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. சங்க தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் 'சைமா', 'டீமா' சங்கங்கள் உட்பட அனைத்து வியாபார மற்றும் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கடும் சொத்துவரி உயர்வு; ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு அதிக சுமையை ஏற்படுத்தும். வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வால், ஸ்தம்பித்துப்போயுள்ளதாக பல்வேறு தரப்பினரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
ஒவ்வொரு தொழிலுக்கும் பேராபத்து வந்துள்ளதால், அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து, காலவரையற்ற வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்; பெயர் அளவுக்கு, கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என பலரும் வலியுறுத்தினர்.
பேரவை தலைவர் துரைசாமி பேசுகையில், ''ஒவ்வொரு சங்கங்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன; நமது பாதிப்பை மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சங்கமும், தங்கள் நிர்வாகிகளுடன் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். வரும், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு, அரிசிக்கடை வீதி, வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று, முடிவுகளை தெரிவிக்க வேண்டும். அன்றைய தினம் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்,'' என்றார்.