/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரி விவகாரம்; அடுத்த கட்ட ஆலோசனை எப்போது?
/
சொத்து வரி விவகாரம்; அடுத்த கட்ட ஆலோசனை எப்போது?
ADDED : டிச 20, 2024 04:24 AM

திருப்பூர்; சொத்து வரி உயர்வு, வணிக கட்டடங்களுக்கான வாடகை ஜி.எஸ்.டி., ஆகிய பிரச்னைகளில், அரசியல் கட்சியினர் மற்றும் வணிகர்களின் போராட்டங்களுக்குப் பிறகும், பிரச்னைகளுக்கான தீர்வோ, தீர்வை நோக்கிய நகர்வோ இல்லை. ஆலோசனைக்குப் பிறகு அரசியல் கட்சியினரும், வணிகர்களும் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
மாநகராட்சி சொத்து வரி உயர்வு, வணிக கட்டடங்களுக்கான வாடகைக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி., ஆகியவற்றைக் கண்டித்து, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் நேற்று முன்தினம் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருப்பூர் மட்டுமின்றி, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்(டீமா) சார்பில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. போராட்டத்துக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. போராட்டத்தைத் தொடர்ந்து, இப்பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வணிகர்கள் உள்ளனர்.
அரசியல் கட்சிகள் நிலை
சொத்து வரி உயர்வு விவகாரத்தை அ.தி.மு.க., தான் முதலில் கையில் எடுத்தது. இதையடுத்து தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., உள்ளிட்ட கட்சியினரும், இந்த விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு, மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு தமிழக அரசு அடிபணிந்துவிடக்கூடாது என்று வலியுறுத்திவருகின்றன. அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தே.மு.தி.க., - பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். சொத்து வரி உயர்வுக்கு எதிராக பா.ஜ.,வும் தெருமுனைப்பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.
பிரச்னைக்குத் தீர்வு இல்லை
கடந்த ஒரு மாத காலமாக இப்பிரச்னைகளை மையப்படுத்திப் போராட்டங்கள் நடந்தாலும் அரசிடம் இருந்து இதற்கான தீர்வு கிடைக்கவில்லை. தீர்வு இல்லையெனில் அடுத்த கட்ட ஆலோசனைக்குப் பின், தங்கள் நடவடிக்கைகள் குறித்து கட்சியினரும், வணிகர்களும் தெரிவிக்க உள்ளனர்.
பொது செயலாளர் பழனிசாமியுடன் அ.தி.மு.க.,வினர் சந்திப்பு
சொத்து வரி உயர்வையும், மாநகராட்சியையும் கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் கடந்த, 3ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்ததையடுத்து, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், திருப்பூர் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சியினர் கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.
--