/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு
/
கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு
ADDED : அக் 03, 2024 04:47 AM

பல்லடம், : பல்லடம் நகராட்சியுடன், ஆறுமுத்தாம்பாளையம், வடுகபாளையம்புதுார் மற்றும் மாணிக்காபுரம் ஊராட்சிகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கிராம சபை கூட்டத்துக்கு வந்தனர்.
அவர்கள் கூறியதாவது:
நகராட்சியுடன் இணைத்து விட்டால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு திட்டங்கள் எதுவுமே கிடைக்காது. வயதானவர்களை யாரும் வேலைக்கு சேர்த்துக் கொள்வதில்லை. வேலை உறுதி திட்டத்தின் மூலம் தான் எங்கள் வாழ்வாதாரமே உள்ளது. கூரை வீட்டில் வசித்தபடி, குறைந்த வருவாய் கொண்டு வாழ்ந்து வருகிறோம். நகராட்சியுடன் இணைந்தால் ஆயிரக்கணக்கில் வரி வாங்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, கிராமசபை கூட்டம் ஆரம்பித்ததுமே, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்களில் பெரும்பாலானோர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய நிலையில், ஒரு சிலருடன் கிராம சபை நடந்தது.
வடுகபாளையத்திலும்...
இதேபோல், வடுகபாளையம்புதுார் ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்திலும், நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள டோல் கேட்டில், 10 கி.மீ., சுற்றளவில் உள்ள அனைத்து கிராம மக்களின் வாகனங்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.