/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டினால் போராட்டம் தொடரும்
/
குப்பை கொட்டினால் போராட்டம் தொடரும்
ADDED : நவ 22, 2025 06:36 AM

திருப்பூர்: இடுவாயில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கிராம மக்கள் திரண்டுவந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடுவாய் கிராமத்தில், சின்னக்காளிபாளையம் பகுதியில், குப்பை மேலாண்மை மையம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக, இடுவாய், ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் கிராம மக்களும், விவசாயிகளும் கரம்கோர்த்து, இடுவாய் சுற்றுச்சூழல் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு உவருவாக்கி, போராடி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம், இம்மூன்று கிராமங்களில், பொதுமக்கள் இணைந்து கிராமசபா புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் கிராம மக்கள் திரளானோர், 'இடுவாய் மண் காப்போம்' என்கிற பேட்ஜ் அணிந்தவாறு, பங்கேற்றனர்.
இடுவாய் சுற்றுச்சூழல் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் பேசியதாவது:
மாநகராட்சி நிர்வாகம், 28 குப்பை தரம் பிரிக்கும் மையங்களையும் முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வேளாண் நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் குப்பையை தேக்கி வைக்க கூடாது.
உயிரை கொடுத்தாவது, இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் மாநகராட்சியின் முயற்சிகளை தடுப்போம். தற்போது, அறவழியில் போராடி வருகிறோம். தேவைப்பட்டால், போராட்டத்தின் வடிவம் மாறும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து, கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்த போராட்டக்குழு பிரதிநிதிகள், 'மக்களின் எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சியின் குப்பை லாரிகள், இடுவாய் கிராமத்துக்குள் வந்தால், சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்' என, கூறி சென்றனர்.

