/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாம்புகள் 'குடியிருப்பு' பயத்துடன் பொதுமக்கள்
/
பாம்புகள் 'குடியிருப்பு' பயத்துடன் பொதுமக்கள்
ADDED : ஆக 21, 2025 11:24 PM

பொங்கலுார்; கொடுவாய் டெலிபோன் எக்சேஞ்ச் வீதி, பாம்புகள் குடியிருப்பாக மாறியுள்ளது. பொதுமக்கள் அச்சத்துடன் நடக்க வேண்டியுள்ளது.
கொடுவாய் பகுதியில் டெலிபோன் எக்சேஞ்ச் உள்ளது. அலுவலகம் பரபரப்பாக இயங்கிய பொழுது அந்த வீதி சுத்தமாக இருந்துள்ளது. தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் ரோட்டோரத்தில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. சீமை கருவேல மரங்கள் மின் ஒயரை தொட்டுச் செல்கிறது.
இதனால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த வீதியில் மின்விளக்கு இல்லாததால் கும்மிருட்டு நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி 'குடி'மகன்கள் வீதியை ஆக்கிரமித்து விடுகின்றனர். பாட்டிலுடன் பலர் வீதியில் அமர்ந்துள்ளதால் ரோட்டில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர்.
ரோட்டோரத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால் பாம்புகள் குடியிருப்பாக மாறி வருகிறது. மக்கள் இந்த வழியாக நடப்பது பெரும் சிரமமாக உள்ளது. எனவே, அவிநாசிபாளையம் ஊராட்சி நிர்வாகம் முட்புதர்களை அகற்றி, மின்விளக்கு அமைத்து, வீதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.