
செந்தில்ராஜா, கே.பி.என்., காலனி:
அதிகபட்சமாக போக்குவரத்து துறைக்கு, 5.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடு முழுதும் போக்குவரத்து வசதி மேம்படும். மின்சார வினியோகத்தில் சீர்திருத்தம் என்ற அறிவிப்பால், மின்கட்டணம் குறைந்தால் வரவேற்கலாம். சிறிய நகரங்களுக்கான விமான சேவை திட்டத்தில், திருப்பூர் இடம் பெற்று, திருப்பூரில் விமான நிலையம் அமைந்தால் சிறப்பாக இருக்கும். வட்டி குறைப்பு நடவடிக்கை திருப்பூர் பின்னலாடைத்துறையினர் எதிர்பார்த்தது; ஆனால், அறிவிப்பில் இடம் பெறவில்லை. எலக்ட்ரிக் வாகன இயக்கத்துக்கு உதவும் லித்தியம் பேட்டரிக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவற்றின் விலை குறையும்.
தெய்வானை, பாரப்பாளையம்:
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கிரெடிட் கார்டு பேருதவியாக இருக்கும். தங்கத்தின் மீதான வரியில் மாற்றம் இருக்கும்; விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரி மாற்றம் இல்லை. மூத்த குடிமக்களுக்கான வருமான வரம்பு பிடித்தம், 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. கல்வித்துறையில் குறிப்பாக தாய்மொழியை டிஜிட்டல் முறையில் வழங்க புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில மொழிகள் முக்கியத்துவம் பெறும். முதன்முறையாக தொழில் துவங்கும் பெண்களுக்கு நீண்ட கால கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கலாம்.
கல்பனா முரளி, இல்லத்தரசி:
புற்றுநோய் சிகிச்சைக்காக மாவட்டம் தோறும் மையங்கள் அமைக்கப்படும் என்பது வரவேற்க கூடிய அறிவிப்பு. அதேபோல் உயிர் காக்கும் மருந்து வகைகள் மீதான அடிப்படை சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நலிவடைந்த மக்களுக்கு மிகவும் உதவியாக அமையும். புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரகப் பகுதியிலுள்ள இளம் தொழில் முனைவோர் பயன் பெறுவர்.