/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாக்கடை வடிகால் கட்டுவதில் 'அரசியல்' தடுத்து நிறுத்தி மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் சமரசம்
/
சாக்கடை வடிகால் கட்டுவதில் 'அரசியல்' தடுத்து நிறுத்தி மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் சமரசம்
சாக்கடை வடிகால் கட்டுவதில் 'அரசியல்' தடுத்து நிறுத்தி மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் சமரசம்
சாக்கடை வடிகால் கட்டுவதில் 'அரசியல்' தடுத்து நிறுத்தி மக்கள் ஆவேசம்: அதிகாரிகள் சமரசம்
ADDED : ஏப் 30, 2025 12:34 AM

திருப்பூர்; நல்லுார், போயர் காலனி பகுதியில், அரசியல் ரீதியாக, தங்கள் பகுதியை புறக்கணித்து வடிகால் கட்டுவதாக கூறி, கட்டுமானப் பணியை பொதுமக்கள் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டலம், ஜெய் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் கட்டும் பணி நடக்கிறது. இதில் போயர் காலனி பகுதியில், முன்னர் வடிகால் இருந்த இடத்தில் புதிய வடிகால், கழிவு நீர் எதிர் திசையில் செல்லும் வகையில் மாற்றி திட்டமிட்டு துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்டுமானப்பணி நடைபெறும் இடத்தில் திரண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தங்கள் பகுதியில் வடிகால் கட்டாமல் புறக்கணிப்பதாக கூறி கட்டுமானப் பணியை நிறுத்த வலியுறுத்தினர்.
தகவல் அறிந்து மாநகராட்சி பொறியியல் பிரிவினர் சென்றனர். அதிகாரிகளிடம், பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், வடிகால் கட்டும் பணி குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் மத்தியில் பேசிய  மாநகராட்சி அதிகாரிகள், 'கழிவு நீர் செல்ல எதிர் திசையில் மட்டம் சரியாக இருந்து, பிரதான வடிகாலில் இணைக்கும் வகையிலும் இருந்த நிலையில், அப்பகுதியில் திட்டமிடப்பட்டது. தற்போது, மீதமுள்ள பகுதியையும் இணைத்து மதிப்பீடு செய்து வடிகால் கட்டப்படும்,' என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'இதற்கு முன், பயன்பாட்டில் இருந்த வடிகாலுக்குப் பதிலாக புதிதாக கட்டுகின்றனர். எதிர் திசையில் கழிவு நீர் செல்லும் வகையில் கட்டப்படுகிறது. மேலும், இந்த வீதியில் ஒரு பாதியில் இருந்து மட்டுமே வடிகால் கட்டப்படுகிறது. மறு பகுதியில் உள்ள வீடுகளின், பழைய சேதமான வடிகாலில் கழிவு நீர் தேங்கி, வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. முறையாக கட்ட வேண்டும்,' என்றனர்.
அப்பகுதியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கு கூட நாங்கள் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறோர்.
ஆனால், இங்கு நிலைமையே வேறாக உள்ளது. பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர் என்பதற்காகவே, கட்சி பார்த்து, எங்கள் பகுதியை ஆளுங்கட்சியினர் புறக்கணிக்கின்றனர். வடிகால் முறையாக முழுமையாக கட்டாவிட்டால், போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.

