/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதிக்காக பொதுமக்கள் மறியல்
/
அடிப்படை வசதிக்காக பொதுமக்கள் மறியல்
ADDED : ஜூன் 30, 2025 12:36 AM

பல்லடம்; பல்லடம் நகராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு இருப்பதாக கூறி, நேற்று, பல்லடம்- மாணிக்கபுரம் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''பத்து நாட்களுக்கு ஒரு முறை, அதுவும் அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் வருகிறது. பாரதிபுரம் முழுவதும் ரோடு தோண்டப்பட்டு வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். கால்வாய் கட்டுமான பணியை உடனடியாக முடித்து, சாலையை சீரமைத்து தர வேண்டும்'' என்றனர்.
விரைவில் அடிப்படை வசதி குறைபாடுகள் சரி செய்து தரப்படும் என, அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.