/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்! புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி
/
மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்! புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி
மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்! புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி
மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்! புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி
ADDED : ஜன 07, 2025 06:58 AM

திருப்பூர்; ''மாநகரில் மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற ராஜேந்திரன் தெரிவித்தார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனராக இருந்த லட்சுமி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜேந்திரன், திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டார். நேற்று மதியம், கமிஷனர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்ற பின், கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கை பேணி காப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டறிவது, போக்குவரத்து நெரிசல், விபத்துகளை தடுப்பது, குறைப்பது உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கவனம் செலுத்தப்படும். மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம். தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சைபர் மோசடி பெருகி விட்டது. மக்கள் ஏமாறாமல் இருக்க தேவையான விழிப்புணர்வு செய்யப்படும். வழக்கமான குற்றங்களில் இருந்து, இது மாறுபட்ட குற்றம்.
இதில் தொடர்புடையவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து விதிகளை மதிக்க, நெரிசலை தவிர்க்க தேவையான இடங்களை ஆய்வு செய்து, நகரின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத செயல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புலம் பெயர் தொழிலாளர்களை அடையாளப்படுத்த, எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறிய, ஆவணப்படுத்தவும் ஆலோசிக்கப்படும். வங்கதேசத்தினர் ஊடுருவல் தொடர்பாக கண்காணிக்கப்படும். நிலுவை வழக்குகள் குறித்து ஆலோசனை செய்து, கண்டுபிடிக்கப்படும். மாநகரத்துக்கு தேவையான விஷயங்கள் உயரதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்பட்டு கேட்டு பெறப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ராஜேந்திரன் கடந்த, 1998ம் ஆண்டு குரூப்-1 தேர்வு மூலம் போலீஸ்துறைக்கு வந்தார். பயிற்சி முடித்த பின், தர்மபுரி மாவட்டம் தேன்கனி கோட்டையில் டி.எஸ்பி.,யாக பயணத்தை துவங்கினார். மதுரை, சாத்துார், ஓமலுார், முதல்வர் பாதுகாப்பு பிரிவில் இருந்தார். விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., பின் 2006ம் ஆண்டு எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று மதுரை, கன்னியாகுமரி, கோவையில் துணை கமிஷனராக இருந்தார். 12 ஆண்டுகள் சென்னையில் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.
மதுரை டி.ஐ.ஜி., நெல்லை கமிஷனர், ஆவடி ஐ.ஜி.,யாக பணியாற்றினார். கொங்கு மண்டலத்தில் கோவை, ஓமலுாரில் பணியாற்றிய பின், நீண்ட காலம் கழித்து, மூன்றாவது முறையாக இப்பகுதியில் பணியாற்ற உள்ளார்.
நேற்று பொறுப்பேற்றவுடன், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் உட்பட பலரும் அவரை சந்தித்து அறிமுகமாகினர். கமிஷனரை சந்திக்க சென்ற போது, பூங்கொத்து, எலுமிச்சை போன்றவற்றை வாங்கி சென்றவர்களிடம் 'இதை இனி பின்பற்ற வேண்டாம்; சாதாரணமாக வந்து சந்தித்தால் போதும்' என்று அறிவுறுத்தினார்.