/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., குருவித்யா மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., குருவித்யா மாணவர்கள் அசத்தல்
'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., குருவித்யா மாணவர்கள் அசத்தல்
'தினமலர்-பட்டம்' இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., குருவித்யா மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 11, 2025 10:28 PM

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர்.
அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, உடுமலை ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 72 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகம்மது ஆசிப், எட்டாம் வகுப்பு மாணவன் ஜெகதீஸ்வரன் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன், திருப்பதி, ஆசிரியர்கள் ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
சிந்தனையை துாண்டுகிறது! பள்ளி முதல்வர் செல்வக்குமார் கூறுகையில், ''வாசிப்பை நேசிக்கவும், அறிவை விரிவு செய்யவும், மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை 'தினமலர்' 'பட்டம்' இதழ் ஏற்படுத்தி தருகிறது.
மாணவர்களின் அறிவார்ந்த சிந்தனையையும் கற்பனை ஆற்றலையும் துாண்டுகிறது. பல்வேறு துறை சார்ந்த அறிவையும், அறிய, அரிய வாய்ப்பை 'பட்டம்' இதழ் ஏற்படுத்தி தருகிறது,'' என்றார்.

