/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் சாகுபடிக்கு கைகொடுக்கிறது மழை
/
வேளாண் சாகுபடிக்கு கைகொடுக்கிறது மழை
ADDED : அக் 13, 2025 01:11 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. நேற்றுமுன்தினம், மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 12.84 மி.மீ., மழை பெய்தது.
குறிப்பாக, அவிநாசி சுற்றுப்பகுதிகளில் கனமழை பெய்தது; இது, 89 மி.மீ., ஆக, பதிவாகியுள்ளது. ஊத்துக்குளியில், 45; காங்கயத்தில் 25.60; திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதிகளில் 26 மி.மீ., - குண்டடத்தில் 18 மி.மீ., க்கு மிதமான மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 11; வட்டமலைக்கரை ஓடையில், 8.20; திருப்பூர் - அவிநாசி ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலக சுற்றுப்பகுதிகளில் 8; பல்லடத்தில் 8; உடுமலை அமராவதி அணை பகுதியில் 6; மூலனுாரில் 4; உப்பாறு அணை பகுதியில் 2.60 மி.மீ., க்கு லேசான மழையும்; திருப்பூர் தெற்கு, தாராபுரம், வெள்ளகோவில் பகுதிகளில் மிக லேசான மழையும் பெய்தது.
புரட்டாசி பட்டத்தில்தான், சோளம், கொள்ளு, தட்டை பயிறு, பச்சைப்பயிறு, நரிப்பயிறு போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாதது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது.
வடகிழக்கு பருவம் கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். மழையின் வருகையால், தற்போது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புரட்டாசி பட்டத்தில் நிலத்தை சமன் செய்து, பயிரிட்டால் தான் தை மாதம் அறுவடை செய்து, தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான உலர் தீவனங்கள் பெறமுடியும். வடகிழக்கு பருவமழை பெய்து, நிலத்தை குளிர்வித்து வருவதால், விதை சோளம், பச்சை பயிறு, கொள்ளு முதலானவற்றை வாங்குவது, நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் முனைப்பு காட்டிவருகின்றனர்.