/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு; வர்த்தகம் சீராக எதிர்பார்ப்பு
/
மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு; வர்த்தகம் சீராக எதிர்பார்ப்பு
மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு; வர்த்தகம் சீராக எதிர்பார்ப்பு
மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு; வர்த்தகம் சீராக எதிர்பார்ப்பு
ADDED : அக் 10, 2025 10:22 PM

உடுமலை; உடுமலை பகுதியில், பரவலாக பெய்து வரும் மழையால், உலர்களங்களில் கொப்பரை உற்பத்தி பாதித்துள்ளது; அறுவடை செய்த தேங்காய்களை, தென்னந்தோப்புகளில் குவித்து வைத்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் நீண்ட கால பயிராக, பல லட்சம் தென்னை மரங்கள பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, நோய்த்தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தேங்காய் உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், கொப்பரை மற்றும் தேங்காய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம், காங்கேயம் கொப்பரை சந்தையில், கொப்பரை சாதா கிலோ, 222 ரூபாய்க்கும், தேங்காய் டன், 67 ஆயிரம் ரூபாய்; கருப்பு தேங்காய் டன், 71 ஆயிரம் ரூபாய் என விலை நிலவரம் இருந்தது.
உணவு பொருட்கள் தயாரிப்பு தேவைக்காக, கேரளா மாநில வியாபாரிகள் நேரடியாக உடுமலை பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், தேங்காயை விலைக்கு வாங்கிச்செல்கின்றனர்.
இவ்வாறு, தேங்காய் விலை பல மடங்கு உயர்ந்தாலும், உற்பத்தி பாதிப்பால், விவசாயிகளுக்கு போதிய பலன் கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, நுாற்றுக்கணக்கான கொப்பரை உலர்களங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக கொப்பரை வர்த்தகம் அடிப்படையிலேயே விலை நிர்ணயிக்கப்படுவதால், அறுவடை செய்த தேங்காய்கள் தென்னந்தோப்புகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வெள்ளை ஈ, வாடல் நோய்த்தாக்குதலால், 40 சதவீதத்துக்கும் அதிகமாக உற்பத்தி பாதித்துள்ளது. நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, மருந்து மற்றும் உர நிர்வாகத்துக்கு அதிக செலவாகிறது.
பல பகுதிகளில், வாடல் நோய் பாதித்த தென்னை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். கொப்பரை மற்றும் தேங்காய் விலை நிலையாக இல்லாமல், தொடர்ந்து மாறி வருகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.