/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை பெய்தும் பயனில்லை! அமராவதி நிரம்பி 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்; பயிர் சாகுபடி இல்லாமல் பாழாகும் பாசன நிலங்கள்
/
மழை பெய்தும் பயனில்லை! அமராவதி நிரம்பி 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்; பயிர் சாகுபடி இல்லாமல் பாழாகும் பாசன நிலங்கள்
மழை பெய்தும் பயனில்லை! அமராவதி நிரம்பி 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்; பயிர் சாகுபடி இல்லாமல் பாழாகும் பாசன நிலங்கள்
மழை பெய்தும் பயனில்லை! அமராவதி நிரம்பி 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றம்; பயிர் சாகுபடி இல்லாமல் பாழாகும் பாசன நிலங்கள்
ADDED : ஆக 03, 2025 08:54 PM

உடுமலை; உடுமலை அமராவதி அணையிலிருந்து, 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வேளாண் துறை, நீர் வளத்துறை ஒருங்கிணைப்பு மற்றும் நீர் நிர்வாக அலட்சியம் காரணமாக மழை நீர் வீணாகி வருவதோடு, உணவு உற்பத்தியும் பாதித்துள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசனம், எட்டு ராஜவாய்க்கால்கள் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்கள், அலங்கியம் முதல் கரூர் வரை, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக, 21,867 ஏக்கர் நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், 25,250 ஏக்கர் நிலங்கள் என, 54,637 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
வழக்கமாக, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஜூன் மாத துவக்கத்திலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, ஆக.,மாத துவக்கத்திலும் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில், குறுவை, சம்பா, தாளடி என மூன்று பருவ நெல் சாகுபடியும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், கரும்பு, நெல், மஞ்சள் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நீர் ஆண்டு துவங்கும் மே மாதம், அணை நீர் இருப்பு, பருவ மழை முன் கணிப்பு அடிப்படையில், வேளாண் துறை, நீர் வளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இணைந்து சாகுபடி மேற்கொள்வது குறித்து திட்டமிட்டு, அதற்குரிய சாகுபடி பயிர்கள் தேர்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வீணாகும் உபரிநீர் ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, நீர் நிர்வாக குளறுபடி காரணமாக, முழுமையான பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதோடு, பருவ மழைகளால் அணை நிரம்பினாலும், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வீணாகி வருகிறது.
நடப்பாண்டு, மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை துவங்கி, ஜூன் 16ல் அணை நிரம்பியது. கடந்த, 50 நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு, ஏறத்தாழ, 3 டி.எம்.சி.,நீர் வரை, பாசன பயன்பாடு இல்லாமல், வீணாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது.
பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு மட்டும், கடந்த ஜூன் 7ல் நீர் திறக்கப்பட்டு, வரும் அக்., 20 வரை, 135 நாட்களில், 80 நாட்கள் நீர் திறப்பு, 55 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு பருவ மழையை முன் கணித்து, நீர் இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர் வரத்து அடிப்படையில், மீதமுள்ள பாசன நிலங்களுக்கும், 135 நாட்களுக்கு நீர் வழங்குவது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால், பாசன பகுதிகளில், நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருப்பார்கள்.
தற்போது, 50 நாட்கள் ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் நீர் சென்றும், அரசு அனுமதி இல்லாததால், பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தீர்வு காண வேண்டும் விவசாயிகள் கூறியதாவது : அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றம், அதிகாரிகளின் நீர் நிர்வாக குளறுபடி காரணமாக, ஒரு போகம் சாகுபடி என குறுகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழைகளால் அணை நிரம்பியும், உபரி நீர் வெளியேற்றம், பல மாதமாக ததும்பிய நிலையில் அணை நீர் இருந்தும், பாசனத்திற்கு பயன்படாத நிலையே நீடிக்கிறது.
தற்போது அணை நிரம்பியும், பாசனத்திற்கு நீர் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்யாமல் இழுத்தடித்து வருவதோடு, பருவ மழை குறைவாக இருந்த ஆண்டுகளில் இருந்த, செப்.,- அக்., மாதம் நீர் திறப்பதையே வழக்கமாக்கியுள்ளனர்.
எனவே, அமராவதி அணை நீர் நிர்வாக குளறுபடிக்கு தீர்வு காண்பதோடு, ஆண்டு தோறும் நீர் ஆண்டு துவங்கும் போது, விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள், நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தி, ஆண்டு முழுவதும் நீர் வழங்கும் காலத்தையும், பயிர் சாகுபடி குறித்தும் முடிவு செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.
அருகிலுள்ள பி.ஏ.பி.,பாசன திட்டத்தில், இந்த நடைமுறை உள்ளது; ஆனால், அமராவதி பாசன திட்டத்தில், நடைமுறைப்படுத்தாமல், நீர் வளத்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
இதனால், பருவ மழை சிறப்பாக பெய்தும், அணை பல முறை நிரம்பினாலும், பாசன பகுதிகள் பயிர் சாகுபடி இல்லாமல், வறட்சி நிலையில் உள்ளதோடு, உணவு உற்பத்தியும் பாதிக்கிறது.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

