/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக்கிரமிப்புகளால் மாயமான மழை நீர்; வடிகால்கள் ரோடுகளில் ஓடும் வெள்ள நீர் ; அதிரடி நடவடிக்கை அவசியம்
/
ஆக்கிரமிப்புகளால் மாயமான மழை நீர்; வடிகால்கள் ரோடுகளில் ஓடும் வெள்ள நீர் ; அதிரடி நடவடிக்கை அவசியம்
ஆக்கிரமிப்புகளால் மாயமான மழை நீர்; வடிகால்கள் ரோடுகளில் ஓடும் வெள்ள நீர் ; அதிரடி நடவடிக்கை அவசியம்
ஆக்கிரமிப்புகளால் மாயமான மழை நீர்; வடிகால்கள் ரோடுகளில் ஓடும் வெள்ள நீர் ; அதிரடி நடவடிக்கை அவசியம்
ADDED : அக் 15, 2024 10:10 PM

உடுமலை : உடுமலையில், பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால்கள், ஆக்கிரமிப்புகளால் மாயமாகியுள்ளன. அவற்றை பாரபட்சமின்றி அகற்றி, வெள்ள நீர் எளிதில் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.
உடுமலையில், பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, பைபாஸ் ரோடு என அனைத்து ரோடுகளிலும் மழை நீர் வடிகால்கள் அமைந்துள்ளன.
ஆனால், அவை முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, கான்கிரீட் சிலாப்கள் அமைத்து, மூடப்பட்டுள்ளன.
மேலும், கடைகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை, கழிவுகளும் அப்படியே, மழை நீர் வடிகால்களுக்கும் வீசப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறு மழை பெய்தாலும், மழை நீர் செல்ல வழியின்றி ரோடுகளில் ஓடி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து, ரோடுகளில் குளம் போல் தேங்கி, சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.
நகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில், சுழற்சி முறையில் மழை நீர் வடிகால்கள் துார்வரும் பணி மேற்கொண்டாலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற, வணிக நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பு ரீதியாக இணைந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு உற்பத்தி, சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு, மழை காலங்களில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, கடை உரிமையாளர்களும் பாதிக்கும் நிலை உள்ளது.
எனவே, மழை நீர் வடிகால்களை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், பாரபட்சமின்றி, மழை நீர் வடிகால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு, கான்கிரீட் சிலாப்கள், படிகள் ஆகியவற்றை பாரபட்சமின்றி அகற்றவும், முழுமையாகவும் துார்வார வேண்டும்.
சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பிரதான ரோடுகளிலுள்ள மழை நீர் வடிகால்களை ஆக்கிரமித்து, பெரும்பாலும் கடைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. துார்வாரச்சென்றாலும், அரசியல் செல்வாக்கு, அமைப்பு செல்வாக்கை பயன்படுத்தி, தடுக்கின்றனர்.
அதோடு, போதிய விழிப்புணர்வு இல்லாமல், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் கொட்டுமிடமாக மாற்றியுள்ளனர். இதனால், மழை நீர் செல்ல வழியின்றி, ரோடுகளில் ஓடி வருகிறது.
வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் அவசியம். தற்போது, பிரதான ரோடுகளில் உள்ள அனைத்து மழை நீர் வடிகால்களும் துார்வாரி, முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.