திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த மாதம், 267.64 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
குளிர் பருவத்தில் (ஜன., - பிப்.,), கடந்த ஆண்டுகளின் மழைப்பொழிவின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் 22.07 மி.மீ., என்பது சராசரி மழையாக கணக்கிடப்பட்டுள்ளது; இந்தாண்டு, ஜன., மாதம் மட்டும் இரண்டு நாட்கள் பெய்த மழையால், குளிர்பருவகால மழை, 41.25 மி.மீ., பதிவாகியுள்ளது.
மார்ச், ஏப்., மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில், முதல் இரண்டு மாதங்கள் மழைப்பொழிவு இல்லை; வறட்சி அபாயம் இருக்குமென மக்கள் அச்சத்தில் இருந்தனர்; மே மாத மழை கருணை காட்டியது; அம்மாதத்தில் மட்டும், மாவட்ட எல்லையில், 11 நாட்கள் மழை பதிவாகியுள்ளது;149.54 மி.மீ., மழை பெய்திருந்தது. கோடை பருவத்தின் இயல்பான மழை அளவு, 115.35 மி.மீ., என்றாலும், ஒரு மாத மழையால் வறட்சி பாதிப்பு நீங்கியது.
தென்மேற்கு பருவத்தின் இயல்பான மழை அளவு, 154.80 மி.மீ., என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, ஜூன் மாதத்தில், 42.46 மி.மீ., - ஜூலை மாதத்தில், 32.85 மி.மீ., - ஆக., மாதம், 104.89 மி.மீ., - செப்., மாதம், 25.10 மி.மீ., என, 205.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த, 2022ம் ஆண்டுக்கு பிறகு, இந்தாண்டு அதிக அளவு கோடை மழை பதிவாகியுள்ளது; 15 நாட்கள் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழைதான், மாவட்டத்தில் அதிகம் பெய்கிறது; அக்., துவங்கி டிச., வரையிலான மூன்று மாதங்களில், 314.30 மி.மீ., மழை என்பது இயல்பான அளவாக உள்ளது. இந்தாண்டில், இதுரை, 297.58 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
இயல்பை விட அதிகம்
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், அக்., மாதம் 18 நாட்கள் மழை பெய்தது; 267.64 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இம்மாதத்தில் நேற்று காலை வரை, மூன்று நாட்கள் மழை பெய்துள்ளது; 29.94 மி.மீ., அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின், மொத்த இயல்பு மழை அளவு, 618.20 மி.மீ., என நிர்ணயிக்கப்பட்டுள்ளது; கடந்த சில ஆண்டுகள் பெய்த மழையின் சராசரி என்பது, 678.26 மி.மீ., என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தாண்டு, நேற்று காலை வரை, 663.73 மி.மீ, அளவுக்கு மழை பதிவாகியுள்ளது; மொத்தம், 21 நாட்கள் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, நவ., மாதத்தில் தான், அதிகபட்ச மழை பதிவாகும்; அதன்படி, வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., மாதம் பனிப்பொழிவு துவங்கி, மழை குறையும். எப்படியிருந்தாலும், மாவட்டத்தின் சராசரி மழை, 800 மி.மீ., க்கு அதிகமாக இருக்கும் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.