/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைக்காலம்; நோய்களை அண்ட விடாதீர்கள் : மருத்துவர் அறிவுரை
/
மழைக்காலம்; நோய்களை அண்ட விடாதீர்கள் : மருத்துவர் அறிவுரை
மழைக்காலம்; நோய்களை அண்ட விடாதீர்கள் : மருத்துவர் அறிவுரை
மழைக்காலம்; நோய்களை அண்ட விடாதீர்கள் : மருத்துவர் அறிவுரை
ADDED : அக் 24, 2025 06:21 AM

திருப்பூர்:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலர் தங்கள் அன்றாட வேலை பாதிக்கப்பட்டும், சிரமப்பட்டும் வருகின்றனர். மேலும் கிருமிகளால் பல நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர், கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
காய்ச்சல், சளி, தும்மல், இருமல், தலைவலி, உடல்வலி, மூக்கடைப்பு, சைனஸ் போன்ற நோய்கள் வரும். ஆஸ்த்மா போன்ற பிரச்னை உள்ளவர்க்கு அது மேலும் தீவிரமடையும்.
கிருமிகளால் தொற்று
தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும். சாதாரண காய்ச்சலாக இருந்தால் வீட்டில் சுக்கு காபி, கஷாயம், கஞ்சி குடித்தால் சரியாகி விடும். பின்னங்கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தலைவலி இருந்தால் டெங்குவாக இருக்கலாம். சாக்கடை கால்வாய் அருகில் வசிப்போர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் 'டிராகன்குளோசிஸ்' என்னும் உருண்டைப்புழுக்கள் அதிகம் இருக்கின்றன. மீன் பிடிக்க, குளிக்க தண்ணீரில் இறங்கினால் இப்புழுவால் தோல் நோய் ஏற்படும். ஈக்களாலும் அதிக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. பழங்களை வாங்கினால் உடனடியாக சாப்பிட வேண்டும். நாளாகிவிட்டால் அழுகி, ஈக்கள் வரும், நோய் வரும். கால் விரல் இடுக்குகளில் அரிப்பு, கொப்புளம் ஏற்படுத்தும் இன்டர்டிரைகோ என்னும் பூஞ்சை நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் காமாலைக்கு காரணமான ஹெபடிடிஸ் ஏ,ஈ வரைஸ்கள் அதிகம் பரவும்.
என்ன சாப்பிடலாம்
காய்ச்சல் வந்துவிட்டால் நிலவேம்பு, அரிசிக்கஞ்சி மற்றும் ஓ.ஆர்.எஸ். எடுத்துக்கொண்டு குணப்படுத்த முடியும். காய்கறிகளை பச்சையாக உண்பதைத் தவிர்க்கவும். வேக வைத்து உண்பதால் கிருமிகள் இறந்து போகும். குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது, துளசி, சீரகம் போன்றன கலந்து அருந்துவது நல்லது. முடக்கத்தான் கீரை, துாதுவளை, மணத்தக்காளி ரசம் சூடாக சாப்பிடுவது நல்லது. சிக்கன் சூப், வெஜிடபுள் சூப் போல திரவ உணவுகள் சிறந்தது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரதச்சத்து மிகுந்த அசைவ உணவுகள், பால், பருப்பு வகைகள், முட்டை, தானியங்கள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள் சாப்பிடலாம். சுகாதாரமற்ற உணவுகள், ஈக்கள் மொய்க்கும்படி உள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கை
மழைக்காலத்தில் முழுமையாக உடலை மறைக்கும்படி ஸ்வெட்டர் போன்ற ஆடைகளை அணிவதால் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். கொசுக்களிடம் தப்பிக்க கொசு வலையே சிறந்தது. மழை காலத்தில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பொழுதுபோக்குகிற்கு என்று பிற இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். குடை, ரெயின் கோட், மாஸ்க், கிளவுஸ், போன்ற பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தல் நல்லது.
வேலை காரணமாக, வங்கி, மருத்துவமனை போன்ற அவசர தேவைக்கு மழையில் நனையாதபடி பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் சிறந்தது. மழையில் நனையாமல் இருந்தாலே, பிரச்னை குறைகிறது. ஈரமான துணிகளை உடனே மாற்ற வேண்டும். 'ஆன்டி பங்கல்' பவுடர்கள் பூசிக்கொள்வதால் பூஞ்சைகளிடமிருந்து தப்பிக்கலாம்.
தமிழக அரசு சுகாதார துறை மற்றும் மருத்துவத்துறை சார்பில் பொதுமக்களுக்கு நோய் பரவலைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பிளீச்சிங் பவுடர், கொசுக்கள், புழுக்களைக் கொல்ல 'பாக்' என்னும் புகை அடித்தல், தண்ணீர் டேங்கில் மருந்து கலத்தல் போன்றன கடைபிடிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனையில் நிலவேம்புக்கஷாயம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.
எதற்கெடுத்தாலும் 'பாரசிட்டமால்' சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு காய்ச்சலுக்கு மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது சரியல்ல. டெங்கு போன்ற பெரிய நோய்க்கு அது தீர்வாகாது. ஆரம்பத்திலேயே சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், மூளைக்காய்ச்சலாக மாறி அது மரணத்தை ஏற்படுத்தும். எளிதில் கிடைக்கும் 'பாரசிட்டமால்' ன்றும் செய்யாது என்று நினைத்து தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்ற எல்லா நோய்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அது கல்லீரல் வரை பாதிக்கக்கூடியது. மருத்துவர் நோயாளியின் தன்மைக்கேட்ப கொடுக்ககூடிய மருந்து மட்டும் பயன்படுத்த வேண்டும். - கோபாலகிருஷ்ணன், இருப்பிட மருத்துவ அலுவலர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை.

