ADDED : ஜன 14, 2025 06:38 AM

பல்லடம்; தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்த புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் பல்லடத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியை சாந்தி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கணேசன், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் சத்தியன், பல்லடம் அறிமா சங்க தலைவர் ராமபிரபு, பி.டி.ஏ., தலைவர்சீனிவாசன், பொருளாளர் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுக்காக மஞ்சப்பை வழங்கி நகராட்சி தலைவர் கவிதாமணி பேசுகையில், ''நமது வீடு, நமது தெருவை போல், ஊரையும் நாட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை. நாட்டை பசுமையாகவும், துாய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். குப்பைகளை, மக்கும் மக்காத குப்பைகள் என, தரம் பிரித்து தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இருப்பினும், மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. எனவே, நீங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்'' என்றார்.
முன்னதாக, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி இயக்கப்பட்டது. தொடர்ந்து, மஞ்சப்பைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவியர், பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெகிழிப்பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்துமாறும், புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.