/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்தவெளி சாக்கடையான ராஜவாய்க்கால்! நெல் விளைவிக்க விவசாயிகள் போராட்டம்
/
திறந்தவெளி சாக்கடையான ராஜவாய்க்கால்! நெல் விளைவிக்க விவசாயிகள் போராட்டம்
திறந்தவெளி சாக்கடையான ராஜவாய்க்கால்! நெல் விளைவிக்க விவசாயிகள் போராட்டம்
திறந்தவெளி சாக்கடையான ராஜவாய்க்கால்! நெல் விளைவிக்க விவசாயிகள் போராட்டம்
ADDED : மே 09, 2025 06:49 AM

உடுமலை; பாசன ஆதாரமான கால்வாய்கள், துார்வாரப்படாமல், மண் மேடாகி, கழிவு நீரும் கலப்பதால், குமரலிங்கம் பகுதி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஒவ்வொரு சீசனிலும், நெல் விளைவிக்க போராட வேண்டிய விவசாயிகள் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்தில், நெல் பிரதான சாகுபடியாக உள்ளது.
பழைய பாசன முறையான, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், நீர் நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிரதான கால்வாய்களுக்கு 'ராஜ வாய்க்கால்' என பெயரிட்டு பாதுகாத்து வந்தனர்.
ஆனால், இன்று, 'ராஜ வாய்க்கால்', திறந்தவெளி சாக்கடையாக மாறி, இந்த விளைநிலங்களில் தற்போது விவசாய சாகுபடி மேற்கொள்வதே சவாலாக மாறியுள்ளது.
துார்வாருவது அவசியம்
குமரலிங்கம் பகுதியிலுள்ள அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில், 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கான பிரதான கால்வாய், குமரலிங்கம் பேரூராட்சி குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ளது.
இக்குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக கால்வாயில் கலக்கிறது. திறந்தவெளி சாக்கடையாக மாறி நீரோட்டம் பாதிப்பதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாாயத்தாமரை செடிகள் கால்வாய் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.
கடந்தாண்டு நெல் நடவுக்குப்பிறகு, கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் செல்லவில்லை. விவசாயிகள் சென்று பார்த்த போது, சந்தானதுறை முதல் குறிப்பிட்ட துாரத்துக்கு, 'கால்வாயை காணவில்லை' என்றளவில், புதர் மண்டி காணப்பட்டது.
வேறு வழியில்லாமல், விவசாயிகளே சாக்கடை நீரில் இறங்கி, ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி, துார்வாரி பாசன நீரை கொண்டு சென்றனர்.
எப்போது மாறும்!
இந்தாண்டும் குமரலிங்கம் கால்வாய் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு, புதர் மண்டி காணப்படுகிறது. பல அடிக்கு, கழிவுகள் தேங்கியுள்ளது; ஆகாயத்தாமரை செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.
ஜூன் மாதத்தில் நடவு பணிகளை துவக்க வேண்டிய நிலையில், கால்வாயின் நிலை விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட கால்வாய்களுக்கு அரசு ஒதுக்கும் நிதி மாயமாகி விடுகிறது எனவும், விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், எதற்கும் அசையாமல், பொதுப்பணித்துறையினர், அலட்சியமாகவே உள்ளனர். 'நாம் சோற்றில் கைவைக்க விவசாயி, விளைநிலத்தில் சேற்றில் கால்வைக்க வேண்டும்,' என்ற நிலை மாறி, குமரலிங்கம் பகுதி விவசாயிகள் சாக்கடையில் இறங்கி, துார்வாரி, நெல் விளைவிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மவுனம் சாதிப்பது, விவசாயிகளின் வேதனையை அதிகரிக்கச்செய்கிறது.