/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்வம் காட்டாத வெளியூர் ரேஷன் கார்டுதாரர்கள்!
/
ஆர்வம் காட்டாத வெளியூர் ரேஷன் கார்டுதாரர்கள்!
ADDED : ஜன 30, 2025 11:52 PM
திருப்பூர்: இம்முறை, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதில் மக்கள் மத்தியில் பெரிதாக ஆர்வம் தென்படவில்லை. பொதுவாக, பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்குவதை, தமிழக அரசு வழக்கமாக கொண்டிருந்தது. 'இம்முறை பணம் வழங்கப் படாதது தான், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைய காரணம்' என கூறப்பட்டது.
திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வெளியூரைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் லட்சக்கணக்கில் வசிக்கின்றனர். மத்திய அரசின் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில், எந்தவொரு ஊரை சேர்ந்தவர்களும், எந்தவொரு ஊரில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால், ரேஷன்கார்டுகளில் இடம் பெற்றுள்ள தங்கள் சொந்த ஊரின் முகவரியை மாற்றாமலேயே, இடம் பெயர்ந்து சென்றுள்ள ஊரில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட தமிழக அரசின் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் பயன், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்திற்கு உட்படுவதில்லை; அந்தந்த ரேஷன் கடைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் இடம் பெயர்ந்தவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, தங்கள் சொந்து ஊருக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கடந்தாண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டதால், வெளியூர் ரேஷன்கார்டுதாரர்கள், விடுமுறை எடுத்து சொந்த ஊர் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி வந்தனர். இம்முறை, பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படாததால், சொந்த ஊர் சென்று பரிசு தொகுப்பு வாங்க வெளியூர்வாசிகள் விரும்பவில்லை என ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

